Header Ads

test

பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக ஒழிக்கப்பட்டால் புலம்பெயர்ந்துள்ள எம் உறவுகள் நாட்டை கட்டியெழுப்புவார்கள் - நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் தெரிவிப்பு.

 நாட்டில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக ஒழிக்கப்பட்டால் அநுர அரசாங்கம் பொருளாதார ரீதியில் அச்சப்பட வேண்டிய அவசியம் ஏற்படாது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (01) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், புலம்பெயர்ந்துள்ள எம் உறவுகள், எம் நாட்டை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே, நாட்டில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக ஒழிக்கப்பட்டால் வேண்டும்

இதனை ஜனாதிபதி கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் 13ஆவது திருத்தச் சட்டம், இந்திய - இலங்கை ஒப்பந்தம் இவை அனைத்தையும் நடைமுறைப்படுத்தக் கூடிய வகையில், செயற்பாடுகள் அமைய வேண்டும்.

எனவே, இந்த புதிய ஆண்டில் எமது கிராம மக்கள் அனைத்து விதமான வசதிகளும் உள்ளது என்று கூறக்கூடிய வகையில் இந்த அரசாங்கம் செயல்பட வேண்டும். அதற்காக நாங்களும் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறோம்.

இந்த வருடத்தில் பின்தங்கிய கிராமங்கள் முழுமையாக வளர்ச்சி பெற வேண்டும். அதற்கான செயற்பாடுகளை இந்த அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். பிரிந்து செயல்படுகின்ற தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.

நாங்கள் ஒற்றுமையாக செயல்படவில்லை என்றால் நம் மண்ணையும் மக்களையும் உதாசீனம் செய்யும் கட்சிகளாகவே நாம் இருப்போம். எதிர்வரும் காலங்களில் நாங்கள் ஒற்றுமையாக இல்லை என்றால் தேசியக்கட்சிகள் இல்லாது போகின்ற துர்பாக்கிய நிலை காணப்படும்.

எனவே, எதிர்வருகின்ற தேர்தல்களில் நாங்கள் ஒற்றுமையாக செயல்படவில்லை என்றால் தென்பகுதியில் ஏற்பட்டுள்ள அநுரவின் அலை வடக்கு கிழக்கிலும் ஏற்படும். இதனால் பாதிப்புகள் எமக்கு ஏற்படுத்தும் என்பது உண்மை.

மக்களின் எதிர்பார்ப்பு தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக செயல்படுங்கள் என்பதே. அந்த ஒற்றுமை இல்லை என்றால் நாங்கள் காணாமல் போய் விடுவோம் என கூறியுள்ளார். 


No comments