தமிழக முதல்வரின் முயற்சியால் விடுவிக்கப்பட்ட இந்திய கடற்தொழிலாளர்கள்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக இலங்கைச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 20 இந்திய கடற்தொழிலாளர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
ஓராண்டுக்கு முன் இலங்கை கடற்படையினரால் சுமார் 20 தமிழக கடற்தொழிலாளர்கள் எல்லை தாண்டி கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டிருந்தனர்.
அவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்கள் தமிழகத்தின் புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியிருந்தது.
கடந்த டிசம்பர் 24ஆம் திகதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கை கடற்படையின் பிடியில் உள்ள 20 இந்திய கடற்தொழிலாளர்களையும் அவர்களது இயந்திரப் படகுகளுடன் உடனடியாக விடுவிக்க இராஜதந்திர முயற்சிகளை மேற்கொள்ளுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அக்கடிதத்தில், அடிக்கடி மேற்கொள்ளப்படும் கைதுகள் மற்றும் தாக்குதல்கள், பாரம்பரிய கடற்பரப்பில் கடற்தொழிலில் ஈடுனடுவதை மட்டுமே நம்பி வாழும் தமிழக கடற்தொழிலாளர்களின் வாழ்க்கையை மிகவும் நிச்சயமற்றதாகவும் ஆபத்தினை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்நிலையில் குறித்த கடிதத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ராஜதந்திர முயற்சிகளின் பலனாக, இந்திய-இலங்கை அரசாங்க அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் 20 கடற்தொழிலாளர்களும் விடுவிக்கப்பட்ட நிலையில், இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அதையடுத்து அவர்களுக்கு தற்காலிக குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டு, விமானம் மூலமாக கொழும்பில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடற்தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 20 இந்திய கடற்தொழிலாளர்களும் விமானம் மூலம் சென்னை வந்தடைந்ததாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment