Header Ads

test

வன்னி ஆசிரியர் வெற்றிடங்கள் உடன் நிரப்பப்படவேண்டுமென ரவிகரன் எம்.பி கடும் வாதாட்டம் - மூன்றுமாதத்தில் தீர்வு வழங்கப்படுமெனத் தெரிவித்த பிரதி பிரதமசெயலாளர்.

வன்னிப் பாடசாலையில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ன உறுப்பினர் துரைராசா ரவிகரன் மிகக்கடுமையாக வாதாடியுள்ளார். 

இந் நிலையில் மூன்று மாத காலத்தில் வடமாகாண பிரதமசெயலாளரின் தலைமையில் இப் பிரச்சினைக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படுமென வடமாகாண பிரதிபிரதம செயலாளர் திருமதி.எ.அன்ரன் யோகநாயகம் பதிலளித்துள்ளார். 

வவுனியாமாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் 02.01.2025இன்று இடம்பெற்றிருந்தது. குறித்த கூட்டத்திலேயே இவ்வாறு ஆசிரியர் வெற்றிடம் தொடர்பில் பேசப்பட்டது. 

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்ற ஆசிரியர் வெற்றிடங்கள் மற்றும், மேலதிகமாக உள்ள ஆசிரியர்களின் தரவுகளையும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதன்போது கோரினார். 

சில மாவட்டங்களில் ஆசிரியர்கள், மேலதிகமாகவும், சில மாவட்டங்களில் ஆசிரியர்கள் வெற்றிடமாகவும் இருப்பதற்கான காரணமென்ன. ஆசிரியர் நியமனங்களை சரியான முறையில் பகிர்ந்து இவற்றை சீர்செய்யவேண்டியவர்கள் இதுதொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளாமலிருப்பது ஏன் என இதற்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் கேள்வி எழுப்பப்பட்டது. 

இந் நிலையில் வடமாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் வே.ஆயகுலன் இதற்குப் பதிலளிக்கையில், புதிய ஆசிரியர் நியமனங்களை வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கே வழங்கிவருகின்றோம். 

எனினும் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களில் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் ஆசிரியர் நியமனங்களைப் பெற்ற யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்களின் சேவைக்காலம் எட்டுவருடங்கள் முடிவுற்றவுடன், ஆசிரியர்கள் தமது இடங்களுக்கு இடமாற்றம் கோரியதனாலேயே யாழ்ப்பாண மாவட்டத்தில் மேலதிகமான ஆசிரியர் தொகை அதிகமாகக் காணப்படுகின்றது. 

இருப்பினும் அதை நிவர்த்திசெய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு மேலதிக ஆசிரியர்களை பெருமளவில் குறைத்து, ஏனைய இடங்களுக்கு ஆசிரியர் நியமனங்களை பகிர்ந்தளிக்கின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

முழுமையாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டதென்றில்லை. இன்னும் இந்த ஆசிரியர் நியமனங்களை சீராக பகிரவேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. 

தற்போது புதிதாக ஆசிரிய இடமாற்றங்கள் கோரப்படுகின்றபோது, இடமாற்றம் கோருகின்ற குறித்த ஆசிரியருக்கான வெற்றிடம் மீள் நிரப்பப்படாமல், இடமாற்றங்களை மேற்கொள்ளக்கூடாதென வடமாகாண கல்விஅமைச்சின் செயலாளர் உத்தரவிட்டிருக்கின்றார். 

இந்த உத்தரவை வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்குத் தெளிவுபடுத்தியிருக்கின்றோம். 

அந்தவகையில் புதிதாக ஆசிரிய இடமாற்றங்கள் இடம்பெறும்போது, வன்னியில் சேவையாற்றுகின்ற ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்றுச் செல்வதற்குமுன்னர், அந்த வெற்றிடத்திற்கு ஆசிரியரொருவர் யாழ்ப்பாணத்திலிருந்து நியமனம் பெற்று வருகைதந்தபின்னரே, வன்னியில் சேவையிலிருந்த ஆசிரியரை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. 

இதனால் இந்தப் பிரச்சினைகள் தற்போது குறைவடைந்து செல்கின்றது. இன்னும் சீராக்கவேண்டி இருப்பதாகத் தெரிவித்தார். 

இதன்போது தொடர்ந்தும் நாடாறுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், 

எமது வன்னிப் பகுதிக்கு குறிப்பாக மிக முக்கியமான பாடங்களான கணிதப்பிரிவு, உயிரியல்பிரிவுகளுக்குக்கூட வெற்றிடங்கள் காணப்படுகின்றது. 

ஆனால் யாழ்ப்பாணத்தில் 63 கணிதப்பிரிவு ஆசிரியர்கள் மேலதிகமாக இருப்பதாக விபரங்களில் சுட்டிக்காட்டப்பட்டது. 

யாழ்ப்பாணத்தில் மேலதிகமாகவுள்ள குறித்த கணிதப்பிரிவைச்சேர்ந்த 63 ஆசிரியர்களையும், ஏனைய நான்கு மாவட்டங்களிலும் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கு நியமிக்காமைக்கான காரணம் என்ன எனக் கேள்வி எழுப்பினார். 

குறிப்பாக முல்லைத்தீவில் கணிதப்பிரிவில் 25ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அதேபோல் ஏனைய மூன்று மாவட்டங்களிலும் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. 

எனவே யாழ்ப்பாணத்தில் மேலதிகமாக இருக்கின்ற ஆசிரியர்களை, வெற்றிடமாக உள்ள இடங்களுக்கு வழங்கி சீர்செய்கின்ற நடவடிக்கைகளை மெற்கெள்ளுமாறும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தினார். 

இதன்போது வடமாகாண பிரதிப் பிரதமசெயலாளர் திருமதி.எ.அன்ரன் யோகநாயகம் பதிலளிக்கையில், நாம் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுடைய கருத்தினை ஏற்றுக் கொள்கின்றோம். 

மிக விரைவில் ஆசிரியர் சங்கங்களுடனும் கலந்துரையாடி, ஏற்கனவே நிபந்தனை அடிப்படையில் வழங்கப்பட்ட இடமாற்றங்கள் தொடர்பிலும் தீர்மானங்களை மேற்கொண்டு, பொதுவாக அனைத்து மாவட்டங்களும் பயன்பெறக்கூடியவகையில் ஒரு இடமாற்றக்கொள்கையை வகுத்து அதற்கான அனுமதியைப் பெற்று அதை நடைமுறைப்படுத்துவோம் எனத் தெரிவித்தார். 

இதன்போது குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இந்தப் பிரச்சினைக்கு நடவடிக்கை மேற்கொள்ள இன்னும் எவ்வளவுகாலம் எடுக்குமெனக் கேள்வி எழுப்பினார். 

அத்தோடு இதனால் வன்னியைச்சேர்ந்த அதிகளவான மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதையும், இது தொடர்பில் கூடுதலாக கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதையும் சுட்டிக்காட்டி மிகவிரைவில் இதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு மீண்டும் வலியுறுத்தினார். 

இதன்போது இன்னும் மூன்றுமாத அவகாசம் கோரிய வடமாகாண பிரதி பிரதமசெயலாளர் திருமதி.எ.அன்ரன் யோகநாயகம், பிரதமசெயலாளரின் தலைமயில் இதற்குரிய தீர்வு வழங்கப்படுமெனத் தெரிவித்தார்.






No comments