புளியம்பொக்கணை பாலத்தின் திருத்த வேலைகள் தொடர்பில் ஆராய்ந்த கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன்.
ஏ- 35 பரந்தன் - முல்லைத்தீவு வீதியில் அமைந்துள்ள புளியம்பொக்கணை பாலத்தின் திருத்த வேலைகள் ஆரம்பமாகும் வரை அந்தப் பகுதியில் உரிய சமிக்ஞைகளையும், தடைகளையும் அமைக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அறிவுறுத்தினார்.
பாலத்தின் புனரமைப்பு வேலைகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளமையால், அந்த வீதியூடாக பயணித்த இளைஞர்கள் இருவர் பாலத்தினுள் வீழ்ந்து உயிரிழந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் அந்த வீதியூடாக நேற்று வெள்ளிக்கிழமை (03.01.2025) பயணித்த ஆளுநர், இடைநடுவில் புனரமைப்பு நிறுத்தப்பட்டுள்ள பாலத்தை பார்வையிட்டதுடன் அந்தப் பகுதி மக்களுடனும் கலந்துரையாடினார்.
இதன்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்களும், பொலிஸாரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.
புனரமைப்பை முன்னெடுத்த ஒப்பந்தகாரரின் ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்தப் பாலத்தின் இருபுறமும் வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை சமிக்ஞைகள் அவரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது.
மார்ச் மாதம் அளவில் புனரமைப்பு மீண்டும் ஆரம்பமாகும் என்றும், அதுவரையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் பாலத்தின் இருபுறமும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாகச் செய்யப்படும் எனவும் பொறியியலாளர்கள் ஆளுநருக்கு சுட்டிக்காட்டினர்.
Post a Comment