Header Ads

test

வனஇலாகாவின் ஆக்கிரமிப்பால் வன்னிமக்கள் நிர்க்கதியில் - வனஇலாகவிற்கு எதிராக கொதித்தெழுந்த ரவிகரன் எம்.பி.

வன்னியில் வனவளத் திணைக்களத்தின் அத்துமீறிய அபகரிப்புக் காரணமாக தமிழ் மக்கள் தமது பூர்வீக குடியிருப்புக் காணிகளையும், பூர்வீக விவசாய வாழ்வாதாரக் காணிகளையும் இழந்து நிர்க்கதியாக்கப்பட்டுள்ளதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியதுடன், வனஇலாகாவின் இச்செயற்பாட்டுக்கு தனது கடுமையான எதிர்ப்பினையும் வெளியிட்டார். 

மன்னார் - மடு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் 03.01.2025 அன்று இடம்பெற்றது. 

குறித்த கூட்டத்தில் மடு பிரதேசசெயலகப் பகுதிக்குட்பட்ட சோதிநகர், இரணைஇலுப்பைக்குளம், மழுவராயர் கட்டையடம்பன், கரையார் கட்டினகுளம் உள்ளிட்ட பகுதிகளில் வனவளத் திணைக்களம் மக்களுக்குரிய பெருமளவான காணிகளை அபகரித்துள்ளதாக கிராம மட்ட பொதுஅமைப்புக்களால் தெரிவிக்கப்பட்டது. 

இதன்போதே  நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். 

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

வனவளத் திணைக்களத்தின் அபகரிப்பு நிலமைகள் தொடர்பில் ஒவ்வொரு அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்கழுக் கூட்டங்களிலும் பேசுகின்றோம். 

வனவளத் திணைக்களத்தின் எல்லைமீறிய அபகரிப்பிற்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் விபரமொன்றை இதில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். 

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2009ஆம் ஆண்டிற்கு முன்னர் 2,22006ஏக்கர் நிலங்களே வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலிருந்தது. இந் நிலையில் 2009ஆம் ஆண்டிற்குப் பிற்பாடு 4,35000ஏக்கர் நிலம் தற்போது வனவளத்திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலிருக்கின்றது. 

இவ்வாறாக மிகப்பாரிய அபகரிப்புக்களை தமிழர் தாயகப் பகுதியெங்கும் வனவளத் திணைக்களம் மேற்கொண்டுவருகின்றது.  இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் அனைத்தும் எமது மூதாதையர்களுடைய பூர்வீக காணிகளாகும். 

வனவளத்திணைக்களம் பிரதேசசெயலருக்கோ, கிராமஅலுவலருக்கோ, கிராம மக்களுக்கோ எவ்வித அறிவிப்புக்களையும் செய்யாது தான்தோன்றித்தனமாக எல்லைக் கற்களையிட்டு இவ்வாறு மக்களுடைய பூர்வீக காணிகளை ஆக்கிரமிப்புச் செய்கின்றது. 

எமது தமிழ்மக்கள் கடந்தகாலங்களில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகாரணமாக தமது இடப்பெயர்வைச் சந்தித்திருந்தனர். 

குறிப்பாக கடந்த 1983ஆம் ஆண்டுகாலப்பகுதியில்கூட பல தமிழ் கிராமங்கள் இடப்பெயர்வைச் சந்தித்தன. இவ்வாறு இடப்பெயர்வினைச் சந்தித்த மக்கள், 2010ம் ஆண்டிற்குப் பிற்பாடே தமது இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டனர். தற்போதும் மீள்குடியேற்றம் செய்யப்படாத கிராமங்களும் இருக்கின்றன. 

இவ்வாறு மக்கள் நீண்டகால இடப்பெயர்வைச் சந்தித்ததால், மக்கள் பயன்படுத்திய, மக்கள் குடியிருந்த காணிகள் தற்போது பற்றைக்காடுகளாக காட்சியளிக்கின்றன. 

இவ்வாறு பற்றைக்காடுகளாக காணப்படுகின்ற எமது மக்களின் பூர்வீகக்காணிகளை வனவளத்திணைக்களம் ஆக்கிரமிப்புச்செய்கின்றது. 

நாட்டில் காடுகள் உருவாக்கப்படவேண்டும். அதற்காக வன்னியிலிருக்கும் எமது மக்களின் பூர்வீக காணிகளை அபகரித்து நாட்டிற்கான ஒட்டுமொத்த காட்டையும் உருவாக்க முயற்ச்சிக்கக் கூடாது. 

எமது மக்களின் பூர்வீக விவசாய வாழ்வாதாரக்காணிகளும் இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் எமது மக்களின் வாழ்வாதாரத்திற்கு வனவளத்திணைக்களம் முட்டுக்கட்டையாக இருந்துவருகின்றது. 

இதுமாத்திரமின்றி படையினர், வனஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல்திணைக்களம் என அனைத்து அரச கட்டமைப்புக்களாலும் இவ்வாறு எமது மக்களின் பூர்வீகக்காணிகள் அபகரிக்கப்படுகின்றன. 

இந்த அரச கட்டமைப்புக்கள் எமது நிலங்களை ஆக்கிரமிக்கின்ற வேலைகளை மாத்திரமே கச்சிதமாக மேற்கொண்டுவருகின்றனவே தவிர வேறெதுவுமில்லை. 

தென்பகுதிகளில் இவ்வாறான நிலமைகள் இல்லை. வடக்கு, கிழக்கிலேயே இவ்வாறு மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு எமது மக்கள் நிர்க்கதியாக்கப்படுகின்றனர். 

வன்னி என்பது கடந்த காலங்களில் விவசாயத்தில் சிறந்து விளங்கிய பகுதியாகக் காணப்பட்டது. 

ஆனால் தற்போது மக்களின் விவசாயக் காணிகள் அனைத்தும் வனவளத் திணைக்களத்தாலும், ஏனைய அரசதிணைக்களங்களாலும் பறிக்கப்பட்டநிலையில், மக்கள் விவசாயம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

எனவே புதிதாகப் பொறுப்பேற்றுள்ள இந்த அரசாங்கம் தமிழ் மக்களுடைய காணிகள் அந்த மக்களுக்கே கிடைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றார்.





No comments