கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் தலைவரை விசாரணைக்கு அழைத்த CID.
கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அருணாசலம் வேழமாலிகிதனுக்கு விசாரணை ஒன்றுக்காக பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவுக்கு(CTID) வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்வரும், டிசம்பர் 28 ஆம் திகதி குறித்த விசாரணை இடம்பெறவுள்ளதாக அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
2013ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 13 மாதங்கள் சிறையிடப்பட்ட பின்னர் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு அரசின் கீழும் பல தடவைகள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் விசாரணைக்காக அழைக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னர் அமைதியாக வாழும் சூழ்நிலை கிடைத்தது என்று நம்பினேன்.எனினும் எதிர்வரும் 28ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவின் விசாரணைகளுக்கு வருமாறு கட்டளை கிடைக்கப்பெற்றுள்ளது எனவும் அவர் கூறியள்ளார்.
எனினும், விசாரணைக்கான காரணம் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் கிளிநொச்சி அலுவலகத்தில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி தான் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் இருந்ததாக அருணாச்சலம் வேழமாலிகிதன் குறிப்பிடுகின்றார்.
விடுதலையின் பின்னர், தமிழ் மக்களின் உரிமைகளுக்காக செயற்பட்டதன் காரணமாக கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலங்களை வழங்க நேரிட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment