ஜனாதிபதி அநுர குமாரவை வாளுடன் சந்திக்க முற்பட்ட நபர் பொலிசாரால் கைது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்திக்க விரும்புவதாக கூறி, வாள் ஒன்றுடன் கலவரமாக நடந்துகொண்ட நபர் ஒருவர் பிலியந்தலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிலியந்தலை தும்போவில பிரதேசத்தைச் சேர்ந்த (53) வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் நேற்று முற்பகல் (26) வாளுடன் ஜாலியகொட சந்தியில் வந்து அங்கிருந்தவர்களிடம் கடுமையான வார்த்தைகளால் முரண்பட்டுள்ளார்.
இதனிடையே, அருகில் இருந்தவர்களிடம் கடுமையான வார்த்தை பிரயோகம் செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ள நிலையில், ஜனாதிபதி அநுரவை சந்திக்க விரும்புவதாகவும், இல்லை என்றால் கழுத்தை அறுத்து உயிரை மாய்த்து கொள்வதாகவும் அருகில் நிறுத்தப்பட்டிருந்த லொறியில் ஏறி கலவரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக பிலியந்தலை காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, அதிகாரிகள் குழுவொன்று சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.
அதனை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேகநபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.
இதன்படி, அந்த நபரை 1990 சுவாசரி காவுவண்டி மூலம் சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, குறித்த நபரின் கையில் இருந்த வாளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment