நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவால் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பம்.
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கான நேரம் ஒதுக்கப்பட்டபோது, யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகத்தின் மீதும், வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி மீதும் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
அத்துடன், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி ஆகியோரை கடுமையாக தாக்கி பேசியிருந்தார்.
மேலும், யாழ். போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் பல இன்னல்களை சந்திப்பதாகவும், பல முறைப்பாடுகளை தன்னிடம் வழங்கி தீர்வு பெற்றுத் தருமாறு கோரியதாகவும் எனவே இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தியை அந்த பதவியில் இருந்து அகற்றுமாறும், அவர் கடந்த அரசாங்க காலத்தின் போது ஒரு அமைச்சருடைய வலது கையாக செயற்பட்டதாகவும் அர்ச்சுனா இதன்போது சபையில் கருத்துக்களை முன்வைத்தார்.
இடையில் குறுக்கிட்ட சபாநாயகர், அர்ச்சுனாவைப் பார்த்து சபையில் உரையாற்றுவதாக சமர்ப்பித்த யோசனைகள் குறித்து மாத்திரம் உரையாற்றுமாறும் பல முறை எச்சரிக்கை விடுத்தார்.
எனினும், இதனை கருத்திற் கொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனக்கு பாதுகாப்பு இல்லை எனவும், தன்மீது 19 வழக்குகள் உள்ளதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் தான் அச்சுறுத்தப்பட்டதாகவும், தன்னுடைய பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி உள்ளிட்டோர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
இதன்போது சபாநாயகரால் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு மீண்டும் எச்சரிக்கை வழங்கப்பட்டது.
எனினும், என்னால் சபையில் கருத்துக்களை முன்வைக்க முடியவில்லை என்றும், அதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்படாது என்றால் எம்மிடம் கூறுங்கள். நான் சபைக்கு வரவில்லை.. வீட்டில் இருக்கின்றேன்” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சபைக்கு அறிவித்தார்.
அத்துடன் சபைக்கு பொருத்தமற்ற விடயங்களையும் அங்கு முன்வைத்ததால் சபையில் சர்ச்சை நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குறிப்பிடும் விடயங்களை கருத்திற் கொள்ளாது மீண்டும் மீண்டும் கடும் தொனியில் அங்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா உரையாற்றிய போது, குறுக்கிட்ட சபை முதல்வர், “நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அவர்களே நீங்கள் கிண்ணியாவில் ஒரு அரசியல் மேடையில் இருந்தீர்களே.. யாருடைய அரசியல் மேடை அது, யாருடைய மேடையில் நீங்கள் இருந்தீர்கள்” என்று நகைச்சுவையான தொனியில் கேட்ட போது சபையில் இருந்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நகைத்தனர்.
Post a Comment