ஜனாதிபதியின் இந்திய விஜயம் தொடர்பில் அதிருப்தி தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா.
எமது கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக இந்திய கடற்றொழிலாளர்கள் உள்நுழைந்து எமது வளங்களை அபகரிக்க ஒரு வினாடி கூட இடமளிக்க கூடாது என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்றையதினம் (19) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது, கடற்றொழிலாளர் பிரச்சினைகளில் எதுவிதமான தீர்வுகளும் எட்டப்பட்டதாக தெரியவில்லை.
இதேநேரம், மனிதாபிமான அடிப்படையில் குறித்த விடயத்தை அணுக வேண்டும் என்ற நிலைப்பாடு வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறாயின் மனிதாபிமான நிலைப்பாடு என்பது என்ன என்பதே இன்றுள்ள கேள்வியாக இருக்கின்றது.
அதாவது, இலங்கையின் கடற்பரப்பிற்குள் இந்திய கடற்றொழிலாளர்கள் வந்து மீன்களை பிடித்து செல்வதற்கும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்யாதிருக்க வேண்டும் என்பதே இந்த மனிதாபிமான நிலைப்பாடாக இருக்க வேண்டும்.
ஆனால், அன்றும் சரி இன்றும் சரி, எனது நிலைப்பாடு எமது கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக இந்திய கடற்றொழிலாளர்கள் உள்நுழைந்து மீன்களை பிடிக்கவோ எமது வளங்களை அபகரிக்கவோ ஒரு வினாடி கூட இடமளிக்கக் கூடாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment