Header Ads

test

மின்மினியே உனக்காக - கவிஞர் அன்பழகி அன்பு .

பூவே
உன்னைப் பார்க்கும்
போதெல்லாம் 
மனது அடித்துக்கொள்கிறது...

விடுதலை என்பது உன்
விழிப்பில்தான் இருக்கிறது
விடுதலை என்பது 
பண்புடன் வாழ்தல்
புரிந்து தெளிந்துகொள்....

ஆணும் பெண்ணும்
இயற்கை
எல்லாப்படைப்புகளையும்
உற்றுப்பார்
ஆணும் பெண்ணுமாய்
அவை எழிலுற்றிருக்கும்....

ஆண் 
உனக்குத் தோழனாகலாம் 
அவனிடம் தோழமை கொள்
தவறே இல்லை 
தோள்களில் மட்டும்
தொற்றிக்கொள்ள விடாதே...

பகட்டுக்கும் 
பண்பாட்டுக்கும்
வேறுபாடுகள் உண்டு
தெளிவாக இரு....  

அன்புக்கு ஆட்படு
பசப்புகளிடம் விலகியிரு... 
அறிவுடன் இருத்தலுக்கும்
ஆணவமாயிருத்தலுக்கும்
பொருளுண்டு
கண்டுகொள்... 

முன்னோர்களின்
வாழ்க்கை நெறிகளை
ஆராய்ந்து பார்.. 
பொருத்தமானவற்றைப்
பொருத்திக்கொண்டு வாழ்...

மையிடுவதோடு
மட்டுப்படுத்திவிடாதே
முன்வைக்கும் அடிகளிலும்
கவனமாயிரு....

கருணையோடிரு 
எவரிடமும் கையேந்தாதே
காலத்திற்கும் உன் 
கைகளை வலுப்படுத்திக்கொள்...

மனித அழுக்குகளையும்
அவமரியாதைகளையும்
கடந்துசெல்...
சிந்தனைத் தெளிவுற்ரோரை
சிந்தையில் ஏற்று...

ஆணைப்போல வாழ
ஆசை கொள்ளாதே 
பெருமையுள்ள ஒரு 
பெண்ணாகவே இரு 
போதும்...

காதல்வயப்படு
குற்றமே இல்லை
கண்ணியமாயிரு....

திருமணமென்பது
உடன்படிக்கையல்ல
அதுவொரு வாழ்வியல்
வாழ்ந்துபார் 
உணர்ந்துகொள்வாய்....

துயரங்களைத் துரத்திவிடு
மயிர்க்கொட்டிகள் அவை 
கனவுகளைப் பெருக்கு
கருவாகும் அவை...

வித்தைகளைக் கற்றுக்கொள் 
வீரமாயிரு..
எடுத்துக்காட்டாயிருந்தவரின்
வரலாற்றை உற்றுப்பார் 
வெளிச்சமுறும் வாழ்க்கை...!!

கவிஞர்
அன்பழகி அன்பு .


No comments