ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனங்கள் தொடர்பில் வெளிவந்த தகவல்.
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ வாகனங்களை வழங்குவதற்கு, முன்னர் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அரசாங்கம் மாற்றியமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்களுக்கு உத்தியோகபூர்வ வாகனங்களை வழங்குவதற்குப் பதிலாக, எரிபொருள் ஒதுக்கீடு வழங்கப்படும் என அதிகாரி ஒருவரை கோடிட்டு, ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் (NPP) கொள்கைகளுடன் முரண்படும் வாகனங்களின் பிரச்சினையை பரிசீலித்த பின்னரே, இந்த முடிவு மாற்றப்பட்டுள்ளது.
அனைத்து அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனங்களை வழங்குவதற்கான நகர்வுகள் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.
அவர்களில் சிலர் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, உத்தியோகபூர்வ வாகனங்களை வழங்கினால் தாங்களும் இதேபோன்ற வாகனங்களை கோரப்போவதாக தெரிவித்திருந்தனர்.
முன்னதாக, அரசாங்கத்தினால் வழங்கப்படும் வாகனங்களை ஏற்றுக் கொள்வதாக ஆளும் கட்சி உறுப்பினர்களில் ஒரு பிரிவினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
குறிப்பாக மாகாணங்களில் உள்ள தமது தேர்தல் தொகுதிகளுக்கான பயணங்களுக்கு வாகனங்கள் தேவை என்பதை சுட்டிக்காட்டியிருந்தனர்.
எவ்வாறாயினும், அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் உத்தியோகபூர்வ வாகனங்களுக்கு உரிமையுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்கள் தொடர்பான அறிவிப்பு
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரியில்லா வாகன அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறையை அரசாங்கம் தொடராது என பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.
ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை இந்த வசதியைப் பெறுவதற்கான, இந்த அமைச்சரவைப் பத்திரத்தை, தமது அமைச்சு சமர்ப்பிக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், அமைச்சர்களின் பயன்பாட்டிற்காக புதிய வாகனங்களை இறக்குமதி செய்யப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அமைச்சுக்கள் பயன்படுத்தும் 228 ஏ8 வாகனங்களை ஏலத்தில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் விஜேபால தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலாக குறைந்த விலை, அதிக எரிபொருள் திறன் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு கொண்ட வாகனங்களை இறக்குமதி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment