நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் புதிதாக அமைக்கப்படவுள்ள விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவுகள்.
நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் குற்றச் செயல்களைக் குறைப்பதற்காக மாகாண மட்டத்தில் புதிய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவுகள் அமைக்கப்படவுள்ளன.
ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒன்று என்ற அடிப்படையில், கொழும்பு குற்றப்பிரிவின் மாதிரியாக, இந்த பிரிவுகள் அமைக்கப்படவுள்ளன.
அத்துடன், அவை, பாரிய குற்றங்களை விசாரிக்கும் மற்றும் மாகாண மட்டத்தில் சிறப்பு விசாரணைகளை நடத்தும் பணிகளை நிறைவேற்றும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், குறித்த பொலிஸ் பிரிவுகளை உருவாக்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அடுத்த வாரம் சமர்ப்பிக்க உள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
ஒன்பது மாகாண பொலிஸ் பிரிவுகளும் ஒரு மூத்த பிரதி பொலிஸ் அதிபர் (DIG) மேற்பார்வையின் கீழ் கொண்டு வரப்படவுள்ளன
அவரே 9 பிரிவுகளின் ஒட்டுமொத்தப் பொறுப்பாளராக இருப்பார். இந்த பிரிவுகள், முதன்மையாக தீர்க்கப்படாத வழக்குகளைத் தீர்ப்பது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குதல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பிற கடுமையான குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் கவனம் செலுத்தும்.
மனித கடத்தல் போன்ற சில மாகாணங்களில் அதிகமாக நடைபெறக்கூடிய சில குற்றங்களையும் குறித்த பிரிவினர் விசாரிப்பார்கள்.
ஒவ்வொரு பிரிவுக்கும் சொந்த அவசர தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்படும். அவற்றின் மூலம் மாகாணங்களின் மக்கள், தகவல்களை வழங்க முடியும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த பிரிவுகள் 2025 ஜனவரி முதல் செயற்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Post a Comment