யானை - மனித மோதலை தடுக்க உடன் நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் - பாராளுமன்றில் ப.சத்தியலிங்கம் வலியுறுத்தல்.
வன்னிப் பகுதியில் குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் அண்மைக் காலங்களில் அதிகமாக இடம்பெறும் யானை- மனித மோதல் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (18.12) இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தனது உரையில்,
பொருளாதாரத்தில் வவுனியா மாவட்டம் ஏனைய மாவட்டங்களைப் போலவே, விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. இங்கு வாழும் விவசாயிகள் யானைகளின் தொல்லையினால் மிகவும் மோசமாக பாதிக்கப்படுகின்றார்கள். கடந்த மாதம் எமது மாவட்டத்தில் மாத்திரம் 11 பேர் யானைத்தாக்குதலுக்கு உள்ளாகி இறந்திருக்கின்றார்கள். ஆகவே எமது பகுதிகளுக்கு யானை வேலி அமைப்பதற்கான நிதியினை அரசாங்கம் கூடுதலாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
கீழ் மல்வத்து ஓயா திட்டம் வவுனியா மாவட்டத்தில் செட்டிகுளம் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்றது. அந்த திட்ட முன்மொழிவில் யானை - மனித மோதலை தடுக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கீழ் மல்வத்தோயா திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதால் திட்டப் பிரதேசத்தில் இருந்து யானைகள் ஏனைய பிரதேசங்களிற்கு இடம்பெயரவேண்டிய சூழல் ஏற்படும் என்பதால் தற்போதுள்ள யானை-மனித மோதல் நிலைமையானது மிக மோசமடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரையில் இவ்விடயம் தொடர்பில் அரசினால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன் என தெரிவித்தார்.
Post a Comment