ஜனாதிபதி அநுரகுமாரவை வரவேற்கவுள்ள சீனா.
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் எதிர்கால சீன விஜயத்தின் போது அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் (CPPCC) தேசியக் குழுத் துணைத் தலைவர் Qin Boyong, இதனை தெரிவித்துள்ளார். நேற்று இலங்கை நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஜனாதிபதியுடனான சந்திப்பின் போதே அவர், இதனை தெரிவித்ததாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) குறிப்பிட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது, கடன் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் போது சீன அரசாங்கம் வழங்கிய ஆதரவுக்காக ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இரண்டு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் தனது பணியை தொடர சீனா எதிர்பார்த்துள்ளதாக Qin Boyong குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், சீன நிர்வாகத்தின் கீழ் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முடிக்கப்படாத பகுதிகளை நிறைவு செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த ஜனாதிபதி திஸாநாயக்க, கொழும்பு துறைமுக நகரம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தை மையமாகக் கொண்ட விநியோக மையங்கள் மற்றும் நிறுவன திட்டங்கள் துரிதப்படும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, பல்வேறு காரணங்களுக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கடல்சார் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சீன அதிகாரியான Qin Boyong குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment