2025ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் தொடர்பில் வலியுறுத்தியுள்ள கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன்.
2025ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் ஒக்ரோபர் மாதத்துக்குள் முடிவுறுத்தப்படவேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
தேசிய நிதி ஆணைக்குழுவால் வாக்குப்பணக்கணக்கு (vote on account) 2025ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரையான 4 மாதங்களுக்குமான நடைமுறை, மூலதன செலவின ஒதுக்கீட்டு விவரம் வடக்கு மாகாணத்துக்குரியது அறிவிக்கப்பட்டுள்ளது. அதை உத்தியோகபூர்வமாக வெளியிடும் நிகழ்வு வடக்கு மாகாண பேரவைச் செயலக மண்டபத்தில் நேற்று (27) இடம்பெற்றுள்ளது.
கிடைக்கும் நிதியை உச்ச அளவில் பயன்படுத்தவேண்டும் என வலியுறுத்திய வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், நிதி ஆணைக்குழுவின் தெளிவான வழிகாட்டல்களுக்கு அமைவாக திட்டங்களைத் தயாரிக்குமாறு கோரினார்.
ஜனவரி 15ஆம் திகதிக்கு முன்னர் திட்டங்களை தயாரிக்கும் பணிகளை நிறைவுறுத்துமாறு பிரதிப் பிரதம செயலர் (நிதி) எஸ்.குகதாசன் அறிவுறுத்தினார்.
பிரதம விருந்தினராகப் பங்கேற்ற ஆளுநர், அடுத்த ஆண்டுக்குரிய மிகப் பெரிய திட்டங்களை விரைந்து ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும் ஒப்பந்தகாரர்கள் தொடர்பான பட்டியலை கைவசம் வைத்திருக்கவேண்டும் எனவும், கடந்த காலங்களில் ஒப்பந்தகாரர்களின் செயற்பாடுகளின் அடிப்படையில் அவர்களில் கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கவேண்டியவர்கள் தொடர்பான விவரங்களையும் தயாரித்து வைத்திருக்கவேண்டும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு மாதமும் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நடத்தப்படவேண்டும் என்றும், நிதி மற்றும் பௌதீக முன்னேற்ற அறிக்கைகள் மாதாந்தம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் ஆளுநர் வலியுறுத்தினார்.
வடக்கு மாகாண பிரதம செயலர் உள்ளிட்ட வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலர்கள், பணிப்பாளர்கள், மாகாண திறைசேரி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
Post a Comment