Header Ads

test

தாயின் கள்ளக் காதலால் பறிபோன 13 வயது மகளின் உயிர்.

இரண்டு பிள்ளைகளின் தாயின் கள்ளத்தொடர்பு காரணமாக 13 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பிலியந்தலை பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாய்க்கும் கள்ளக் காதலனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தலையிட்டதில் கத்திக்குத்துக்கு இலக்காகி குறித்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நேற்று முன் தினம் (26) இடம்பெற்ற சம்பவத்தில் பிலியந்தலை போகுந்தர பிரதேசத்தில் வசித்து வந்த 8ஆம் தரத்தில் கல்வி கற்கும் ஓஷாதி கௌசல்யா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

சம்பவ தினம் ஓஷாதி தனது தாய் மற்றும் 15 வயது மூத்த சகோதரியுடன் வீட்டில் இருந்ததாகவும், அப்போது தாயின் கள்ளக்காதலன் வீட்டிற்கு வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வந்த நபர் வீட்டில் இருந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டநிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் பெண்ணை கத்தியால் பல தடவைகள் குத்தியுள்ள நிலையில், தாயை காப்பாற்ற இரண்டு சிறுமிகளும் குறுக்கிட்டு அதனை தடுத்துள்ளனர். இதன்போது சந்தேக நபர் பிள்ளைகளையும் கத்தியால் தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதன் பின்னர், சந்தேக நபர் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்று கயிறு அறுந்ததால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அதன் பின்னர் கீழே இருந்தவர்களிடம் பொலிசில் சரணடைவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

காயமடைந்த தாய் மற்றும் இரண்டு மகள்கள், தாய் பணிபுரிந்த நிறுவனத்தின் ஊழியர் ஒருவரால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வெரஹெர இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஆபத்தான நிலையில் இருந்த 13 வயதான ஓஷாதி கௌசல்யா உயிரிழந்துள்ளார்.

பொலிஸில் சரணடைவதாகக் கூறிவிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபர் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில், கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அதேவேளை தப்பியோடிய சந்தேக நபர் சில வருடங்களுக்கு முன்னர் மஹாஓயா பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டவர் என தெரியவந்துள்ளது.


No comments