வன்னியில் சர்வதேச மனித உரிமைகள் தினம் துக்க தினமாக அனுஷ்டிப்பு.
யுத்தம் நிறைவடைந்த தருவாயில், இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் கதி என்னவென்பதை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தி வன்னியில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பினால், சர்வதேச மனித உரிமைகள் தினம் துக்க தினமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் அனைத்து மனித உரிமை மீறல்களையும் நிறுத்துமாறு கோரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய காரியாலயத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டு, கிழக்கிலங்கையில் மனித உரிமைகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பினர் போராட்டங்களை நடத்தி பதினான்கு வருடங்களுக்கு மேலாக காணாமல் போயுள்ள தமது உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டுமென ஒரே குரலில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போரின் முடிவில், இலங்கை பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட அவர்களது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் பற்றிய உண்மை எப்போது வெளிவரும் என்பதே போராட்டங்களில் முன்வைக்கப்பட்ட முதன்மையான கேள்வி.
எமது உறவுகள் எமக்குக் கிடைக்கும்வரை அல்லது எமக்கு நீதி கிடைக்கும்வரை சர்வதேச மனித உரிமைகள் தினம் எமக்கு துக்க தினமே என போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி, மரியசுரேஷ் ஈஸ்வரி, போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.
Post a Comment