இரண்டு மாணவர்களின் உயிரைப் பறித்த வாகன விபத்து.
பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
பதுளை தர்மதூத கல்லூரிக்கும் ஊவா கல்லூரிக்கும் இடையிலான பாடசாலைகளுக்கிடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகன பேரணியின் போது கெப் வண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்திருந்தனர்.
இதன்போது விபத்திற்குள்ளான வாகனத்தை செலுத்திய பாடசாலை மாணவனிடம் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ நேற்று ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை வழங்கிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் பெற்ற மாணவனுக்கு வீட்டிலிருந்து பாடசாலைக்கு கெப் வண்டியில் செல்வதற்கு அனுமதி வழங்கியிருந்ததாகவும் பெற்றோர்கள் தமது பொறுப்புகளை புறக்கணித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த மாணவர் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பித்துள்ளதாகவும், சாரதி அனுமதிப்பத்திரம் கிடைக்கும் வரை தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த கிரிக்கெட் போட்டி தொடர்பில் பாடசாலை அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் பொலிஸாருடன் கலந்துரையாடியதாகவும் இதன்போது மாணவர்களை வாகன பேரணியில் செல்ல பொலிஸார் அனுமதிக்கவில்லை எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இருந்த போதிலும் மேற்படி மாணவன் வீட்டில் இருந்த கெப் வண்டியை எடுத்துக்கொண்டு இவ்வாறு மாணவர்களுடன் மைதானத்திற்கு பயணித்த வேளையில் சீமெந்து கம்பத்தில் கெப் வாகனம் மோதி அதனை கட்டுப்படுத்த முடியாமல் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த விபத்தில் கெப் வண்டியை செலுத்திய மாணவனும் காயமடைந்துள்ளதாகவும், அவருக்கு எதிராக வழக்கு தொடரப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment