Header Ads

test

கிளிநொச்சியில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்க இருந்த 98 ஏக்கர் காணி பொதுமக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது.

 கிளிநொச்சியில் 98 ஏக்கர் காணியை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கும் திட்டமானது பொதுமக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது.

நில அளவீட்டினை மேற்கொள்வதற்காக நில அளவீட்டுத் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள் நில அளவீடு செய்வதற்கு சென்றபோது பொதுமக்களால் நில அளவீட்டுப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

கிளிநொச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கௌதாரிமுனை கிராம அலுவலர் பிரிவில் இறால் வளர்ப்பு திட்டத்திற்கு 98 ஏக்கர் காணியினை தனியார் ஒருவருக்கு வழங்கும் நோக்கில் நேற்றைய தினம் (04-04-2023) நில அளவீடு செய்ய முற்பட்டபோது நில அளவீட்டுப் பணிகள் பொது மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகளின்மை, 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சொந்த காணிகள் இன்றி வாழுதல் என பல்வேறு காணித்தேவைகள் உள்ளன.

இருப்பினும் தனியாருக்கு சொந்தமான காணிகள் மற்றும் அரச காணிகள் உள்ளடங்களாக 98 ஏக்கர் காணியை தனியாருக்கு வழங்கும் நோக்கில் நில அளவீடு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் அளவீட்டுப்பணிகள் தடுக்கப்பட்டுள்ளன.

பல்வேறு காணித்தேவைகள் உள்ள நிலையில் தமது பகுதியில் உள்ள காணிகளை வழங்க முடியாது என்றும் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு பூநகரி பிரதேச செயலாளர் த.அகிலன் சென்று பொதுமக்களுடன் கலந்துரையாடியதுடன் இது தொடர்பில் மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.



No comments