ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாது - சிந்திக்கத் தவறும் பெற்றோர்.
"வரும் முன் காப்போம்" என்பதற்கு இணங்க,உங்கள் வீட்டுப் பிள்ளைகள் சமூகத்திற்கு எடுத்துக்காட்டானவர்களாக வாழ,வளர வேண்டும் என்பதில் ஒவ்வொரு பெற்றோரும் மிகவும் கண்ணியமாக இருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
உங்கள் வீட்டுக்குள்ளும் பிரச்சினைகள் வர முன்னர் அன்பான பெற்றோர்களே நீங்கள் விழித்துக்கொள்ளுங்கள். ஆயிரமாயிரம் கனவுகளோடு உங்கள் பிள்ளைகளைப் பெற்று நாளை மற்றவர் காறி உமிழும் வகையில் வளர்த்துவிடாதீர்கள்.
உங்கள் பிள்ளைகள் மற்றவர்களின் கனவில் மண்ணை அள்ளித் தூவி விடாது பேணிப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் காலம் பெரும் பொறுப்பைத் தந்துள்ளது.
உங்கள் பிள்ளைகளுடன் தினம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்களின் நடத்தைகளைக் கண்காணியுங்கள். அவர்கள் தம்மோடு இணைத்துக்கொள்ளும் நட்பு வாட்டாரங்கள் யார் என்பதையும்,அவர்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் கூர்ந்து கவனியுங்கள்.
பிள்ளைகளின் நடத்தைகளில் மாற்றங்கள் ஏற்பட்டால் அவ் மாற்றத்திற்க்கான காரணங்களை ஆராய்ந்து முளையிலே நுள்ளி விடுங்கள். இல்லாது போனால் அப் பிள்ளைகள் தவறான பாதையைக் கையில் எடுக்கும் போது அவற்றுக்கு அன்றாடம் அடிமையாகி அவற்றிலிருந்து விடுபட முடியாமல்,தம்மையும் அழித்து தாம் சார்ந்த சமூகத்தையும் அழித்துவிடுவார்கள் என்பது மட்டுமல்லாமல் இன்னுமொரு சமூக விரோதியை உருவாக்கிவிட்ட பங்கு உங்கள் தலைமேலே சுமத்தப்பட்டுவிடும்.
"எந்தக் குழந்தையும் மண்ணில் பிறக்கையில் நல்ல குழந்தையடி அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே" என்பது, என்னைப் பொறுத்தவரையில் பிள்ளைகள் நல்லவர்களாகவோ தீயவர்களாகவோ வளர்வதற்கு முழுமையான காரணமும் அவர்கள் வாழும் சமூகமே காரணமாகவுள்ளது.
மனித வாழ்வு என்பது, மனிதனுக்கு வழங்கப்பட்ட விலை மதிக்க முடியாத பெரும் பேறே. இறைவன் மனிதன் வாழத்தக்க அழகான இயற்கைச் சூழலையும் எம்மோடு இணைத்தே படைத்துள்ளான். இயற்கையில் காணப்படும் சொர்க்கத்தை ஆண்டு அனுபவிக்க முடியாத மானிட வர்க்கம்,அர்ப்ப சொர்ப்ப இன்பத்திற்க்காக ஏதோ ஒன்றை தமக்குள் புகுத்தி அவற்றுக்கு அடிமையாகி அழிந்து வருகிறான்.
அன்பான தாய் தந்தையேரே..!!!
உங்கள் பிள்ளைகளுக்காக ஒரு நாளில் குறைந்தது ஒரு மணி நேரத்தையாவது ஒதுக்கி அவர்களுடன் மனம் விட்டுப் பேசி, அவர்கள் விடும் சிறு தவறுகளை அவர்களுக்கு புரியும் படி,அவற்றால் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றிய தெளிவை சொல்லிக் கொடுங்கள்.
உங்களால் உங்கள் பிள்ளைகளின் தவறுகளைத் திருத்த முடியாது போனால்,அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்.அவர்களை சட்டம் திருத்தட்டும்.
நாளைய சமூகம், தாசி பெற்ற பிள்ளையோ இவன் இவள் என உங்களை நோக்கி அவர்கள் விரல்கள் நீள முதல் உங்கள் வீட்டில் உள்ள பிள்ளைகளை நீங்களே திருத்துங்கள்,திருந்துங்கள் நாடும் நலம் பெறும் நாளும் சுகம் பெறும்.
- ஈழத்து எழுத்தாளர் வவுனியூர் ரஜீவன்
.
Post a Comment