வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியில் புதிய அதிபர் நியமனத்திற்கு எதிராக வெடித்த பாரிய போராட்டம்.
வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியில் புதிய அதிபர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (10-01-2023) பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
கோவில்குளம் இந்துக்கல்லூரியில் புதிய அதிபர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே கல்லூரி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசியர்கள் அமைதியான கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கையில்,
இந்துக்கல்லூரிக்கு புதிதாக அதிபராக நியமிக்கப்பட்டுள்ளவர் ஒழுக்கமற்றவர் என்பதுடன் அதிபராக பதவி வகிக்க தகுதியற்றவர்.
அத்துடன் ஏற்கனவே குறித்த நபர் ஆசிரியராக பணியாற்றிய பாடசாலையில் சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் என தெரிவித்தனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள், எல்லா வகையிலும் தகுதியான அதிபர் எமது பாடசாலைக்கு வேண்டும், மாணவர்களை பாதுகாக்கும் மதிப்பு மிக்க அதிபர் வேண்டும், மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் அதிபர் எமக்கு வேண்டாம், தகுதியற்ற அதிபர் எமக்கு வேண்டாம் போன்ற பதாதைகளை தாங்கியிருந்தனர்.
தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டு, வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளருக்கு குறித்த நியமனத்தை நிறுத்துமாறு கோரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment