Header Ads

test

கல்விச் சமூகத்தை இன்னொரு திசைக்கு இழுக்கும் முயற்சி - எதிர்கொள்ளப்போகும் கனத்த நாட்கள்.

பாடசாலைகள் தோறும் மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை என்பது கல்விச் சமூகத்தை இன்னொரு திசைக்கு இழுத்து செல்வதற்கான முயற்சியாகவே பார்க்க வேண்டிய தேவை உள்ளது.

சிந்தனையற்ற சமூகமாக்கி இலகுவில் தமது  எண்ணங்களை அடைந்துவிட முடியும் என்ற நப்பாசையில் இவ்வாறான செயல்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டிருக்கலாம் என்றே எண்ணத் தோன்றுகிறது.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமைப்பட்ட ஒருவர் சுய சிந்தனையற்றவராகவே காணப்படுவார் என்பதே உண்மை.அவ்வாறு அவர் இருப்பாரேயானால் எதைப்பற்றிய சிந்தனையும் அற்றவராக, சொல்லப்போனால் நடைபிணமாகவே தனது வாழ்நாட்களை எதிர்கொள்வார்.  

இவை இவ்வாறு இருக்க,

பல வருடங்கள் தொடர்ந்த யுத்தத்திலும் ஆழிப்பேரலையிலும் நசியுண்டும் சிக்குண்டும் அழித்தொழிக்கப்பட்ட தமிழினம் மெது மெதுவாக மீண்டெழுந்து வரும் நிலையில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் விழிகளை உயர்த்த வைத்துள்ளது.

""மண் மீட்புக்காக தனது முழுப்பலத்தையும் பயன்படுத்தி,ஈற்றில் ஆயுதங்களை மெளனிக்கவைத்து தனது போராட்ட வடிவத்தை மாற்றியுள்ள தமிழ் இனம், தற்போது தேவையற்ற ஒன்றுக்காகவும்(போதைப்பொருள்), மீண்டும் தமது எஞ்சியுள்ள பலத்தை பிரயோகிக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது என்பது சற்று விசித்திரமாக இருந்தாலும் தற்போது போராடித்தான் ஆக வேண்டும் என்ற தேவை ஒவ்வொரு வீட்டு வாசல்களையும் தட்டிநிற்கிறது.""

இல்லை என்று இருந்த விடயம் தலைவிரித்தாடும் போது, மனங்களை பாறாங்கற்க்கள் மோதிச் செல்வதாதவே உணர முடிகிறது. 

"போதைப்பொருள் என்ற ஒரு சொல் உச்சரிக்கப்படாத புனித பூமியில் யார் கண்பட்டுவிட்டதோ என்றே மனங்களை கொதிக்க வைக்கிறது."

எவை எவ்வாறு இருப்பினும் மீண்டும் தமிழினம் விழி நிமிர்த்த வேண்டிய காலம் காலடியில் வந்து நிற்கும் போது, வீண் வீராப்புக்களை தவிர்த்து,ஒருமித்த குரலில் போதைப்பொருள் பாவனையை அழித்தொழிக்க முற்பட வேண்டிய சூழல் கருக்கொண்டுள்ளது.

"பாடசாலைகளில் உட்புகுந்துள்ள போதைப்பொருள் பாவனை அடுத்துவரும் சந்ததியின் முழுப்பலத்தையும் உறிஞ்சிவிடும் என்பதே உண்மை."

அதாவது, குறைவடையும் கல்வி வளர்ச்சி,

குறைவடையும் ஆயுட்காலம்,

குறைபாடான குழந்தைகள் பிறப்பு,

இனத்தின் மீதான பற்றற்ற நிலை,

நலிவடைந்து போகும் தேக ஆரோக்கியம்,

அதிகரிக்கும் மரணம்,

அதிகரிக்கும் குற்றச் செயல்கள் (கொலை,கொள்ளை,கற்பழிப்பு,முறுகல் நிலை,வன்முறைகள்), 

கட்டுப்பாடற்ற சமூக உறவு,

அற்றுப் போகும் உழைக்கும் தன்மை,

கட்டுப்படுத்த முடியாத நோய்த் தொற்றுக்கள்,

இனத்துக்குள்ளே குரோதம் ஏற்பட்டு அவையே முற்றி தன் இனத்தையே விழுங்குதல்,

குறைவடையும் குழந்தை பிறப்பு,

குறைந்துபோகும் இன விகிதாசாரம்

போன்ற விடயங்கள், எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு இனிப்பான செய்தியாகவே இருக்கும் எனும் போது,தமிழினம் எவையுமின்றி வெறுங்கையுடன் நிற்க்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள்ளேயே தள்ளப்பட்டிருக்கும்.

ஆக மொத்தத்தில் இவை இவ்வாறு இருக்க,

பாடசாலைகள் மட்டத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையை என்ன விலைகொடுத்தேனும் அழிக்க வேண்டிய தேவையே தற்போதுள்ளது.

அந்தவகையில்,பாடசாலைகள் ஆரம்பிக்கும் நேரத்தில் மாணவர்கள் மீது உடல் பரிசோதனை,உடமைகள் மீதான பரிசோதனை போன்றவை மிகத் தீவிரமாக இடம்பெறவேண்டும்.

அத்துடன் மாணவர்கள் பாடசாலை நேரங்களில் பாடசாலை வளாகத்தை விட்டு வெளியில் செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.செல்ல வேண்டிய தேவை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பொறுப்பான ஆசியர்களுடன் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும்.

பாடசாலைகளில் மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கும்போது போதைப்பொருட்களை பாடசாலை வளாகத்திற்குள் கொண்டு செல்ல முடியாதுபோகும் நிலையில்,சம்மந்தப்பட்ட மாணவர்கள் அல்லது போதைப்பொருள் வியாபாரத்தை மேற்க்கொள்பவர்கள் இரகசியமான முறையில் பாடசாலை வளாகங்களில் மறைத்துவைத்து தமது வாடிக்கையான மாணவர்களுக்கு இடம்தொடர்பில் தகவல் வழங்க முடியும் என்பதால்,முற்றுமுழுதாக பாடசாலை வளாகம் பரிசோதனை செய்யப்படவேண்டும்.

போதைப்பொருட்களுடன் அடையாளப்படுத்தப்படும் மாணவர்களை உடனடியாக கைது செய்வதுடன்,அவற்றை வழங்கியவர்கள் பற்றிய விசாரணைகளை மேற்க்கொண்டு அவர்களை கைது செய்வதுடன் கடுமையான தண்டனைகளையும் வழங்க வேண்டும்.அத்தோடு மாணவர்களை நன்னடத்தை செயல்பாட்டுக்காக குறிப்பிட்ட கால எல்லைவரை தனிமைப்படுத்தி அது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

போதைப்பொருள் வியாபாரத்தை மேற்க்கொள்பவர்கள் கைது செய்யப்படுகின்ற சந்தர்ப்பங்களில்,அவர்களுக்கான தண்டனையாக சமூக மயப்படுத்தப்பட்ட தண்டனைகள் வழங்கப்படவேண்டும்.

சொல்லப்போனால் அதே கிராமங்களில் காணப்படும் பொது வேலைகளை அவர்களுக்கு வழங்கும்போது ஏனையவர்களுக்கு இவை ஒரு படிப்பினையாக இருக்கும்.

வட மாகாண கல்வி அமைச்சு முழுப்பொறுப்புடன் செயல்படும்போதே எதிர்க்கொள்ளப்போகும் கனத்த நாட்களை  முறியடிக்க முடியும்.

  - ஈழத்து எழுத்தாளர் வவுனியூர் ரஜீவன்.


No comments