நீதவான் ஒருவருக்கு விதிக்கப்பட்டுள்ள 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை.
காலி நீதவான் நீதிமன்றத்தின் முன்னாள் நீதவான் டி.எஸ்.மெரிஞ்சி ஆராச்சி என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தலா 10 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
மதுவரி குற்றத்திற்காக அறவிடப்படும் அபராத தொகை குறைவாக பதிவு செய்தன் மூலம் பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றம் செய்துள்ளதாக தொடரப்பட்டுள்ள இரண்டு வழக்குகளை நீண்டகாலம் விசாரித்த மேல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலையாகாது தவிர்த்து வரும் குற்றவாளியான மெரிஞ்சி ஆராச்சியை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு பகிரங்க பிடியாணை பிறப்பிக்குமாறும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா உத்தரவிட்டுள்ளார்.
இதனை தவிர குற்றவாளியான முன்னாள் நீதவானுக்கு 22 ஆயிரத்து 500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. குற்றம் சுமத்தப்பட்டவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் இருக்கும் நிலையில், அவர் இன்றியே வழக்கு விசாரணைகள் நடத்தப்பட்டன.
கடந்த 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் திகதி மற்றும் 5 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் மதுவரி வழக்கு ஒன்றில் விதிக்கப்பட்ட 7 ஆயிரத்து 500 ரூபா அபராதத்தை ஆயிரத்து 500 ரூபாவாக குறைத்து பதிந்தமை மற்றும் இன்னுமொரு வழக்கில் விதிக்கப்பட்ட 5 ஆயிரம் ரூபா அபராதத்தை ஆயிரத்து 500 ரூபாவாக பதிவு செய்தமை மூலம் பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சட்ட மா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment