வவுனியாவில் மாணவர்களிடையே வேகமாகப் பரவும் போதைப்பொருள் பாவனை.
வவுனியாவில் மாணவர்களிடையே வேகமாகப் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதால் பெற்றோரும், பாடசாலை சமூகத்தினரும் விழிப்பாக இருக்க வேண்டும் என்று மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜெயக்கெனடி தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில் இளைஞர், யுவதிகளின் தற்போதைய நிலை தொடர்பில் இன்று கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்தில் நகரை அண்டிய சில பாடசாலைகளில் சில மாணவர்கள் மற்றும் சில மாணவிகள் போதைப்பொருள் பாவனையில் ஈடுகின்றனர் என்று எமக்குத் தனிப்பட்ட ரீதியிலும், பொலிஸார் ஊடாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு ஏற்ப அவர்களை அதில் இருந்து விடுபடச் செய்வதற்கான நடவடிக்கைகள் எம்மால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இன்னும் பல பாடசாலைகளில் மாணவர்கள் போதைப்பொருட்களைக் கொண்டு வருவதாகவும், அதனை தமது சக மாணவ, மாணவிகளிடம் கைமாற்றுவதாகவும் தகவல் கிடைத்துள்ள போதும் சில பாடசாலைகள் தமது பாடசாலையின் பெயரைக் கருத்தில் கொண்டு அதனை வெளிக்கொண்டு வரத் தயக்கம் காட்டுகின்றனர்.
மாலை வேளைகளில் வவுனியா வைரவப்புளியங்குளம், பூங்கா வீதி, குடியிருப்பு, குருமன்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் வெளிப் பகுதிகளைச் சேர்ந்த இளம் சமூகத்தினர் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, பெற்றோர் தமது பிள்ளைகள் தொடர்பிலும் அவர்களது நடத்தைகள், அவர்களது நண்பர்கள், அவர்கள் சென்று வரும் இடங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.
பாடசாலை அதிபர், ஆசிரியர்களும் மாணவ சமூகத்தின் மீது அக்கறையுடன் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தும் வகையில் பாடசாலைகளில் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
வடக்கில் யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் அதனால் ஏற்படும் விபரித விளைவுகள் குறித்து நாம் தினமும் அறிந்து வரும் நிலையில் வவுனியா மாவட்டத்தில் இந்த நிலை அதிகரித்து வருகின்றது.
இதனால் அனைவரும் பொறுப்புடன் செயற்பட்டு போதைப்பொருள் பாவனையற்ற சமூகத்தை உருவாக்க முன்வர வேண்டும் என தெரிவித்தார்.
Post a Comment