தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் இரு கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதமர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த இரண்டு கோரிக்கைகளுக்கு பிரதமர் தினேஸ் குணவர்தன இணக்கம் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பொன்று (23.09.2022) நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது வவுனியாவை மாநகர சபையாக உயர்த்துவதற்காக 'வவுனியாவ ' எனப் பெயர் குறிப்பிடப்பட்ட கடிதம் தொடர்பில் பிரதமருக்கு எடுத்து கூறிய நிலையில் குறித்த கடிதத்தில் 'வவுனியாவ' என எழுதப்பட்டதை மாற்றி இவ்வளவு காலமும் எழுதப்பட்டதை போன்று 'வவுனியா' என எழுதப்பட வேண்டும் என தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
இதன்போது “நீங்கள் ஏன் இதனை பெரிது படுத்துகின்றீர்கள்” என பிரதமர் கேள்வி எழுப்பிய நிலையில் குறிக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி வி விக்னேஸ்வரன் பின்வருமாறு பதிலளித்துள்ளார்.
“கொழும்பு றோயல் கல்லூரியில் நானும் நீங்களும் கல்வி கற்றோம். அக்காலத்தில் கல்வி கற்பித்த ஆசிரியர் ஒருவரின் பெயரைக் கூறிய விக்னேஸ்வரன் அவரை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள் அவரிடமும் கல்வி கற்றிருப்பீர்கள். அவர் அடிக்கடி கூறுவார் சிறு சிறு விடயங்களில் பிழை விடும்போது கவனிக்காமல் விட்டால் அது ஒருநாள் பெரிய பிழையாக வந்து பிரச்சினையை ஏற்படுத்தி விடும் என கூறுவார்.
அதையே நான் இப்போது கூறுகிறேன் வவுனியா என்ற பெயரை வவுனியாவாகவே விடுங்கள்" என கூறியுள்ளார்.
இதன்போது சிரித்த பிரதமர் தினேஷ் குணவர்த்தன குறித்த கடிதத்தில் பிரசுரிக்கப்பட்ட 'வவுனியாவ' என்ற பெயரை மாற்றுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.
மேலும் கல்முனை தமிழ் உப பிரதேச செயலகத்திற்கான கணக்காளர் நியமிக்கப்படாமை மற்றும் பொது நிர்வாக உள்நாட்டு அலுவலகங்கள் அமைச்சின் இணையதளத்தில் கல்முனை தமிழ் உப பிரதேச செயலகம் என்ற பெயர் நீக்கப்பட்டமை தொடர்பில் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர், கல்முனை தமிழ் பிரதேச செயலக விவகாரத்தில் தமிழ் முஸ்லிம் தரப்புக்குள் கணக்காளர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் வேறுப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றது. ஆகையால் தற்காலிகமாக தமிழ் மொழி தெரிந்த சிங்கள கணக்காளர் ஒருவரை தற்காலிகமாக நியமிப்பதற்கு தான் இணங்குவதாக தெரிவித்துள்ளார்.
இதன்போது பிரதமரை சந்திக்க சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பின்னர் தற்காலிகமாக ஒருவரை நியமிப்பதற்கு இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சால்ஸ் நிர்மலாநாதன் கோவிந்தன் கருணாகரன், கலையரசன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment