போதையற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளின் கீழ் மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி.
நாட்டில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பிலும் அவற்றால் ஏற்படும் சமூக சீரழிவுகளை தடுக்கும் வகையிலும் விழிப்புணர்வை மேற்கொள்ள வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.
போதைப்பொருள் மாபியாக்கள் எதிர்கால சந்ததியின் நலனை கருத்தில்கொள்ளாது தமது வியாபாரத்தை மாத்திரம் கருத்திற்கொண்டு பன்முகப்படுத்தப்படும் போதைப்பொருள் வியாபாரமானது மெல்ல மெல்ல உப்பிப் பெருத்து பாடசாலைகள்வரை சென்றுள்ளது.
இவற்றை கவனத்தில் எடுத்த அனைத்துலக தமிழர் மேம்பாட்டு நிதியமானது “போதையற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளின் கீழ் இம்மாதம் (செப்டம்பர்) 11,17,18 ம் திகதிகளில் கிளிநொச்சி இந்துபுரம் சேச்சடி மைதானத்தில் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஒன்றை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவது,
அனைத்துலக தமிழர் மேம்பாட்டு நிதியத்தின் முழுமையான நிதியாதரவுடனும் ஒழுங்கமைப்புடனும் பீனிக்ஸ் இளைஞர் கழகம் மற்றும் இளந்துளிர் விளையாட்டுக்கழகமும் இணைந்து போதைப்பொருள் பாவனைக்கெதிராக விழிப்புணர்வினை மேற்கொள்ளும் பொருட்டு மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியை முன்னெடுத்திருந்தனர்.
இச் சுற்றுப்போட்டியில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 24 கழகங்களுக்கிடையில் மூன்று சுற்றுக்களாக தொடர்ந்து மூன்று தினங்கள் இடம்பெற்று, அரையிறுதிப்போட்டிக்கு 4 அணிகள் தெரிவு செய்யப்பட்டன.
18.09.2022 அன்று குறித்த இறுதிச் சுற்றுப் போட்டியானது இடம்பெற்றநிலையில் புதியபாரதி அணி முதலிடத்தையும் குறிஞ்சி அணி இரண்டாம் இடத்தையும் தட்டிக்கொண்டதுடன்,மூன்றாம் இடத்தை இளந்தென்றல் அணியினர் தம்வசப்படுத்தினர்.
குறித்த விழிப்புணர்வு நிகழ்வில்,போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வை மேற்கொள்ளும் பொருட்டு மூத்த கலைஞர் உமாகாந்தன் அவர்களின் நெறியாள்கையில் "மனமே மாறாயோ" வீதி நாடகமும் இடம்பெற்றது.
இச் சுற்றுப் போட்டியில் பெருந்திரளான இளைஞர்களும் பொதுமக்களும் மதத் தலைவர்களும் கலந்துகொண்டதுடன் புத்தியீவிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன்,பிரதம விருந்தினராக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திரு த.சத்தியமூர்த்தி கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment