யாழ் மாநகர சபை விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்.
யாழில் ஆரோக்கிய நகரத்திட்டத்தினால் துவிச்சக்கரவண்டிப் பாவனையை ஊக்குவிக்கவும் வீதி விபத்துக்களைக் குறைக்கும் நோக்குடனும் ஆவணி மாதம் முதலாம் திகதி விழிப்புணர்வு செயற்திட்டம் ஒன்று பல்வேறு குழுக்களின் பங்குபற்றுதலுடனும் இடம்பெற்றதாக மாநகர மேயர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த செயற்பாட்டினை தொடர்ந்து முன்னெடுப்பதற்காக பல்வேறு அரச மற்றும அரச சார்பற்ற பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன் துவிச்சக்கரவண்டிப் பாவனையை ஊக்குவிப்பதற்காகவும், வீதி விபத்துக்களைக் குறைக்கும் முகமாகவும் பாடசாலை சமூகம் கவனத்திற்கொள்ளப்பட்டது.
இதன்படி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மற்றும யாழ்.இந்து ஆரம்ப பாடசாலைகளை அண்மித்த பகுதிகள் ஒரு வழிப்பாதைக்கும் துவிச்சக்கர வண்டிப்பாவனைக்கு ஏற்ற வீதிகளாகவும் நடைமுறைப்படுத்த ஆரம்பத்திட்டம் கொண்டுவரப்படுகின்றது.
இது இன்றிலிருந்து(21) பாடசாலை வேளைகளில் குறிப்பிட்ட காலப்பகுதிகளில் மாத்திரம் (காலை 6.45 – 8.00 மற்றும் பி.ப 1.00-2.00) நடைமுறைப்படுத்தப்படும் என்பதனை அறியத்தருகின்றேன்.
கஸ்தூரியார் வீதி ஒரு வழிப்பாதையாகக் கொண்டுவரப்படுகின்றது. அரசடி வீதியிலிருந்து கஸ்தூரியார் வீதிக்குள் உள்நுழையும் வாகனங்கள் சுற்றுச்சந்தியினை (roundabout) அடைந்து வலது பக்கமாக கல்லூரி வீதிக்குள் திரும்புவது தடைசெய்யப்பட்டுள்ளது.
K.K.S. வீதியிலிருந்து சுற்றுச்சந்தி (roundabout) வரையான கல்லூரி வீதி ஒரு வழிப்பாதையாக கொண்டுவரப்படுகின்றது. இங்கு K.K.S. வீதியிலிருந்து யாழ் இந்துக்கல்லூரி நுழைவாயிலை அடையும் வாகனங்கள் சுற்றுச்சந்தியினை அடைந்து வலது மற்றும் நேரான வீதிகளினூடாக வெளிச் செல்ல முடியும்
கல்லூரி ஒழுங்கை துவிச்சக்கர வண்டிப்பாவனைக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.அனைவரும் இவ் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
இத் திட்டமானது ஒரு பாதுக்காப்பு மிக்க வீதிகளை பாடசாலைச் சமூகத்திற்கும் பொதுமக்களிற்கும் ஏற்படுத்திக்கொடுப்பதனை நோக்கமாகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ் வீதி வழிமுறைகள் உள்ளடங்கிய பதாதைகள் குறிப்பிட்ட வீதிகளில் நாளைமுதல் வைக்கப்படும். அத்துடன் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தன்னார்வலர்கள் மற்றும் பாடசாலை சமூகம் இவ் ஆரம்பப் பரீட்சார்த்த நடவடிக்கையின்போது பொது மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என்பதை அறியத்தருகின்றேன்.
யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறையின் நேரடி ஒருங்கிணைப்பு மற்றும் நடைமுறைப்படுத்தலின் உலக சுகாதார ஸ்தானம் யாழ் மாநகரசபை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் யுனிசெப், சுகாதார சேவைகள் திணைக்களம், கல்வி அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகாரசபை, வீதி அபிவிருத்தித் திணைக்களம், விதி அபிவிருத்தி அதிகாரசபை, அரச அரசசார்பற்ற நிறுவனங்கள், பொலிஸ் நிலையம், யாழ் மாவட்ட செயலகம்; மற்றும் நல்லூர் பிரதேச செயலகம் உட்பட பல்வேறு தரப்பினரும் இத்திட்டத்தின் பங்காளிகளாக தமது ஒத்துழைப்பை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment