எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வாகனங்கள் நிறுத்தத் தடை.
வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வாகனங்களை தொடர்ந்தும் நீண்ட வரிசையில் நிறுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ரொசான் சந்திரசேகர தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் எரிபொருள் விநியோகத்தை சீராக மேற்கொள்ளும் முகமாக எரிபொருள் அமைச்சினால் தேசிய ரீதியில் எரிபொருள் அட்டை முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் நீண்ட வரிசையின்றி எரிபொருளை பெறக் கூடிய நிலமை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், வவுனியா எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வருவதற்கு முன்னதாகவே வாகனங்களை நிறுத்தி வரிசைப்படுத்தி நாட்கணக்கில் விடுவதன் மூலம் விபத்துகள் ஏற்பட்டு வருவதுடன், போக்குவரத்து அசௌகரியங்கள் ஏற்படுவதாகவும், வர்த்தக நிலையங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
எனவே, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் வருகின்ற போது வாகனங்களை வரிசைப்படுத்தி ஓர், இரு மணித்தியாலங்களுக்குள் எரிபொருளை பெற்றுக் கொள்ளுமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்துவதுடன், நாட் கணக்கில் வாகனங்களை நீண்ட வரிசையில் நிறுத்தி வைப்பதை தவிர்க்குமாறும் கோருகின்றேன்.
அத்துடன், பொதுப்போக்குவரத்து மற்றும் வர்த்தக நடவடிக்கைளுக்கு இடையூறாக ஒரு நாள் முன்னதாகவே நிறுத்தப்படும் வாகனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment