வடக்கு மாகாண ஆளுநர் எடுத்துள்ள அதிரடி முடிவு.
வடக்கு மாகாணத்தின் இரு மூத்த செயலாளர்களை, வடக்கு மாகாணத்திற்கு வேண்டாம் என ஆளுநர் ஜீவன் தியாகராயா அதிரடியாக கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
வடக்கின் மூத்த செயலாளர்களான இ.இளங்கோவன் மற்றும் செந்தில்நந்தனன் ஆகியோருக்கே இவ்வாறு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் 26-07-2022 திகதியிடப்பட்டு நேற்று மதியம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களது 2021-10-05 ஆம் திகதிய தங்களது கடிதத்திற்கு அமைய என குறிப்பிடப்பட்டு வழங்கியுள்ள இந்தக் கடிதத்தில் எதிர்வரும் 2022-08-01 முதல் மாகாணத்தில் இருந்து விடுவிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண கல்வி மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர்களாக இருந்த இருவரும் இந்த ஆண்டின் ஜனவரி மாதமே தற்போதைய அமைச்சுகளிற்கு இடமாற்றப்பட்டனர்.
தற்போது மாகாணத்திற்கு வெளியில் தூக்கி எறியப்படுவதனால் ஏதும் பழிவாங்கும் செயலாக இருக்குமா என கேள்வி எழுப்பப்படுகின்றது.
இதேநேரம் ஆளுநரால் செயலாளர்களிற்கு அனுப்பிய கடிதம் தனிப்பட்ட இல்லங்களிற்கு முகவரியிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு மாகாணத்தின சகல செயலாளர்களிற்கும் சகல பிரதிப் பிரதம செயலாளர்களிற்கும் பிரதியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு இடமாற்றப்படும் இரு செயலாளர்களான உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரான இ.இளங்கோவனின் இடத்திற்கு பதில் கடமையாக உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேநேரம் மாகாண சபை செயலாளர் செந்தில்நந்தனன் இடத்திற்கு குகநாதன் பதில் கடமைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்று மாகாண விவசாய அமைச்சின் பணிப்பாளர் சிவமோகன் மற்றும் மாகாண கட்டிடத் திணைக்களப் பணிப்பாளர் ஆகியோரும் அப் பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே தடவையில் அதிக நிர்வாக உத்தியோகத்தர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுவது ஏனைய அதிகாரிகள் மட்டத்திலும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment