Header Ads

test

இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு.

 தேசிய பிரச்சினைகள் தீர வேண்டுமெனில் சர்வகட்சி அரசு மிகவும் அவசியம். இதற்கு எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசு அமைக்க ஆதரவு கோரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுப்பிய கடிதம் தொடர்பில் செய்தியாளர் ஒருவர் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்தாவது,

சர்வகட்சி அரசுக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கூட்டமைப்புக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். நேற்றுமுன்தினம் தான் அவரின் கடிதம் வந்தது. அந்தக் கடிதத்துக்கு நான் இன்னமும் பதில் அளிக்கவில்லை.

இருப்பினும், சர்வகட்சி அரசை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி நடத்தவுள்ள மாநாட்டில் நாம் பங்கேற்போம். எம்மால் இயன்ற அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவோம்.

நாட்டு மக்களுடைய பிரச்சினை தீர வேண்டுமெனில் சர்வகட்சி அரசு மிகவும் அவசியம். இதற்கு எமது பரிபூரண ஒத்துழைப்பை வழங்குவோம். 

பொருளாதாரப் பிரச்சினை மாத்திரமல்ல அரசியல் பிரச்சினைகள், சமூகப் பிரச்சினைகள் எனச் சகல தேசிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு எம்மால் இயன்ற ஒத்துழைப்பை சர்வகட்சி அரசுக்கு வழங்குவோம்.

ஏனெனில் ஒரு பிரச்சினையைத் தீர்த்து மற்றைய பிரச்சினைகளைத் தீர்க்காது விட்டால் நாட்டில் முன்னேற்றம் ஏற்படாது.

ஆனபடியால் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண ஜனாதிபதிக்கும் அவர் தலைமையில் அமையவுள்ள சர்வகட்சி அரசுக்கும் நாங்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்.

எனவே, அனைத்துத் தேசிய பிரச்சினைகளுக்கும் ஒரு ஒழுங்கு முறையில் தீர்வைக் காண ஜனாதிபதி தலைமையில் அமையவுள்ள சர்வகட்சி அரசு முன்வரவேண்டும்  என தெரிவித்தார். 


No comments