எரிபொருளுக்காக காத்திருந்த மோட்டார் சைக்கிள்களை அடித்து நொருக்கிய காட்டு யானை.
எரிபொருள் நிலையத்தில் மூன்று நாட்களாக வரிசையில் நின்ற மோட்டார் சைக்கிள்கள் யானையின் தாக்குதலுக்குள்ளாகி சேதமடைந்துள்ளன.
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி எரிபொருள் நிலையத்தில் 6,7,8,9 ஆம் இலக்க வாகனங்கள் எரிபொருள் பெறுவதற்காக காத்திருந்தன.
இந்த நிலையில், இன்று (29) அதிகாலை 7 வாகனங்கள் யானையின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன.
குறித்த யானை வீதியை கடக்க முற்பட்டபோது வீதியில் எரிபொருளுக்காக காத்திருந்த வாகனங்களை அடித்து நொறுக்கி சேதமாக்கியுள்ளன என வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மூன்று மோட்டார் வாகனங்கள் முற்றாகவும் 4 வாகனங்கள் சிறிதளவும் சேதமாக்கப்பட்டுள்ளன. இதனால் சுமார் 30 இலட்சம் நட்டம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
நாம் எமது பிள்ளைகளை பாடசாலைக்கு ஏற்றுவதற்கும், விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பெட்ரோலின்றி மிகவும் தவித்து நிற்கின்றோம்.
இந்த நிலையில் பெட்ரோல் நிரப்புவதற்காகவே எமது மோட்டார் சைக்கிள்களை வைத்தோம். எனினும், தற்போது இந்த நிலைக்குள்ளாகியுள்ளது.
இந்த பாதிப்பினால், எமது பிள்ளைகளின் கல்வியும், எமது வாழ்வாதாரமும் பாதிப்படையும். இந்த சம்பவமானது மரத்தால் விழுந்தவனை மாடேறி மிரித்ததைப் போல உள்ளது.
எனவே இது தொடர்பில் அரசாங்கம் கவனமெடுத்து எமக்கான உதவிகளை செய்யவேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்ததனர்.
Post a Comment