குரங்கு அம்மை நோய் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.
இலங்கைக்கு வரும் ஆபிரிக்க மற்றும் ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளால் குரங்கு அம்மை நோய் பரவக்கூடிய சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ் போதனா வைத்தியசாலையில் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
குரங்குகள் மற்றும் எலிகள் மூலம் பரவும் குரங்கு அம்மை நோயானது தற்போது ஆபிரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இவ்வாறான நிலையில் இலங்கையிலும் இந்நோய் பரவுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் தென்படுவதால் மக்கள் அவதானமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
கடந்த 2003-ஆம் ஆண்டு அமெரிக்காவில் 70 பேர் வரை இந்நோய் இனம் காணப்பட்டுள்ளது. அவ்வாறு இனங்காணப்பட்டவர்களில் விலங்குகள் கடித்தல் நகம் கீறல் அவற்றின் உமிழ்நீர் போன்றவற்றின் மூலம் இந்நோய் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நோயானது விலங்குகளிலிருந்து மனிதனுக்கும் மனிதனிலிருந்து மனிதனுக்கும் பரவக்கூடியதாக இருக்கின்றது.
அதுமட்டுமல்லாது நோய் உள்ளவர் பாவித்த படுக்கை விரிப்பு தலையணை போன்றவற்றின் மூலம் பரவுவதோடு குறிப்பாக ஆண் ஓரினச்சேர்க்கையாளர்களால் அதிகம் இந்நோய் பரவுகிறது.
அத்துடன் நோயின் தாக்கமானது தொடர்ச்சியான காய்ச்சல், பெரிதான கட்டிகள் வீக்கத்தை கொண்டிருப்பதோடு வாயில் கொப்புளங்கள் ஏற்படுவதோடு நீர் இழப்பும் ஏற்படும் எனவும் வைத்திய நிபுணர் வைத்தியர் கேதீஸ்வரன் இதன்போது மேலும் தெரிவித்தார்.
Post a Comment