கோட்டாபயவின் முடிவிற்கு அதிரடி காட்டிய நீதிமன்றம்.
மரணதண்டனை கைதியான துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியதை எதிர்த்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் அவரது தாயார் ஸ்வர்ணா பிரேமச்சந்திர ஆகியோர் தாக்கல் செய்த இரண்டு மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன.
இதன்போது இரண்டு வழக்குகளையும் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதுடன், சில்வாவுக்கு பயணத் தடை விதித்தும் அவரது கடவுச்சீட்டை பறிமுதல் செய்யுமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கில் பிரேமச்சந்திர சார்பில் சட்டத்தரணி எராஜ் டி சில்வாவும், ஹிருணிகா சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனும் ஆஜராகியிருந்தனர்.
மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு கடந்தவருடம் ஜனாதிபதி கோட்டாபய பொது மன்னிப்பு வழங்கியிருந்தார்.
இலங்கையின் பிரபல அரசியல்வாதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவிற்கும், துமிந்த சில்வாவிற்கும் இடையில் 2011ம் ஆண்டு இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில், பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நால்வர் உயிரிழந்திருந்தனர்.
இந்த கொலை தொடர்பிலான வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட துமிந்த சில்வாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இவ்வாறு பாரதூர குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வா, தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளமை, உள்நாட்டில் மாத்திரமன்றி, சர்வதேச ரீதியிலும் பாரிய சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment