சீரற்ற காலநிலையால் மலையகத்தில் ஏற்பட்டுள்ள கடும் பாதிப்பு.
சீரற்ற காலநிலை காரணமாக மலையக பகுதிகளில் தொடர்ச்சியாக காற்றுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தலவாக்கலை ஹேமச்சந்திரா மாவத்தை பகுதியில் இன்று காலை 6.30 மணியளவில் தொடர் குடியிருப்புகள் உள்ள தொகுதியின் பின்புறத்தில் 50 அடி உயரத்திலுள்ள மதில் சரிந்து விழுந்ததில் நான்கு குடியிருப்புகள் சேதமாகியுள்ளன.
இதன்போது ஒரு வீட்டில் இருந்த 53 வயதுடைய தாய்க்கு கைகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதோடு, குறித்த தாய் தலவாக்கலை தோட்டத்தில் இயங்கும் மருத்துவ நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
அத்தோடு கர்ப்பிணித் தாயொருவர் எவ்வித ஆபத்துக்கள் இன்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.
அத்தோடு வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளதோடு, வீடுகளில் இருந்த பெறுமதிமிக்க பொருட்களும் மண் மேட்டில் புதைந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர் மழை காரணமாக குறித்த பகுதியில் மண் சரிவு தொடர்ந்த வண்ணம் உள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்ததுடன், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர் உறவினர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகளை வழங்க நுவரெலியா பிரதேச செயலகம் மற்றும் தலவாக்கலை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
Post a Comment