முள்ளிவாய்க்கால் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள அதிகளவான படையினர்.
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைந்துள்ள வளாகத்தைச் சூழ இராணுவம், பொலிஸார் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவுத்தூபி அமைந்துள்ள வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்களால் ஏற்பாட்டுப் பணிகள் நேற்று நண்பகல் முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது நேற்று(16) மாலை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பந்தல் அமைக்க முற்பட்ட ஏற்பாட்டுக்குழுவிற்கு பொலிஸார் தடைவிதித்துள்ளதுடன்,உரிய அனுமதிகளை பெற்று பந்தல் அமைக்கும் பணிகளை முன்னெடுக்குமாறும் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பந்தல் அகற்றப்பட்டுள்ளதுடன், கொடிகளை கட்டி ஏனைய சிரமதான பணிகளை முன்னெடுக்கும் நடவடிக்கையில் ஏற்பாட்டு குழு ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு செல்லும் உள்ளக வீதிகள் மற்றும் நினைவேந்தல் வளாகத்துக்கு அண்மையான பகுதிகளில் பொலிஸார், இராணுவம், புலனாய்வாளர்கள் நிறுத்தப்பட்டுக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு நினைவேந்தலுக்கான ஏற்பாடுகளை மக்கள் செய்து கொண்டிருந்த வேளை நினைவேந்தல் வளாகத்தைச் சுற்றி இராணுவ வாகனங்கள் அங்குமிங்கும் சுற்றித் திரிந்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment