மன்னார் சுற்றுலா மையத்தின் இன்றைய அவல நிலை.
மன்னார் - மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குஞ்சுக்குளம் தொங்கு பாலம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா மைய கட்டிடத்தொகுதி பாழடைந்த நிலையில் காணப்படுகின்றமை குறித்து மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு வடமாகாண சபையால் ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் குஞ்சுக்குளம் தொங்கு பாலம் பகுதியில் அமைக்கப்பட்ட சுற்றுலா மையம் கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் திகதி முன்னாள் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் அதிகாரிகளினால் வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.
மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள குறித்த சுற்றுலா மையம், நானாட்டான் பிரதேச சபையின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த சுற்றுலா மையம் தற்போது அடர்ந்த காடு போல் காட்சியளிப்பதோடு, குறித்த மைய கட்டிடத்தொகுதி சேதமாக்கப்பட்டுள்ளதோடு, பொருட்களும் உடைக்கப்பட்டுள்ளன என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
பல லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டு சுமார் 6 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இவ்வாறு சேதப்படுத்தப்பட்டு மக்கள் பாவனை இன்றி காணப்படுகின்றமை குறித்து உரிய அதிகாரிகள் கவனயீனமாக செயல்படுகின்றமை குறித்து மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக நானாட்டான் பிரதேச சபை துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் மற்றும் நலன் விரும்பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Post a Comment