Header Ads

test

வடக்கில் அதிரடியாக ஆவா குழுவைச் சேர்ந்த பலர் கைது.

 வவுனியா - ஓமந்தை, கோதண்டர் நொச்சிகுளம் பகுதியில் ஆவா குழுவின் பதாதைகளை பயன்படுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்ட  சந்தேகநபர்கள் நேற்று மாலை ஓமந்தைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது  சந்தேகநபர்களிடம் இருந்து கத்தி, வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் ஆவா குழு என அறிமுகப்படுத்தி துண்டுப்பிரசுரங்களை வெளியிட்ட 5 பேரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளதுடன்,  அவர்களிடம் இருந்து வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன. 

கடந்த 29.04.2022 அன்று புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அனாமதேய துண்டுப்பிரசுரம் ஒன்று ஆவா குழு என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.

அவ்வாறு வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டதாவது,

புதுக்குடியிருப்பில் நடந்துகொண்டிருக்கும் சில தவறுகள் தண்டிக்கப்பட வேண்டியவை சில தவறுகள் எமது குழுவினால் கண்டறியப்பட்டுள்ளன.

தவறுகள் யாதெனில், பெண்களை காதலிப்பது போன்று நடித்து அவர்களை ஏமாற்றி புகைப்படம் மற்றும் காணொளி எடுத்து பணம் பறிப்பதாகவும் எமக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே அறிவுறுத்தியும் யாரும் கருத்தில் கொள்ளவில்லை என்பதால் தற்போது PTK001 ஆவா குழுவினர் தகுந்த தண்டனை வழங்க முன்வந்துள்ளனர்.

அத்துடன் பாடசாலை மாணவர்கள், மாணவிகள் போதை மருந்து பாவித்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

இதில் தற்போது 5 மாணவிகள் இனம் காணப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் இன்றில் இருந்து தாங்களாகவே திருந்திக்கொள்ள வேண்டும் இல்லையெனில் வீதியோரத்தில் நிற்கவைத்து தர்ம அடிகொடுக்கப்படும்.

அத்துடன் பாலியல் துஸ்பிரயோகம், மிரட்டி பணம் பறித்தல் ஹெரோயின் விற்பனை செய்பவர்கள் அனைவருக்கும் தகுந்த தண்டனை வழங்கப்பட இருக்கின்றது. நன்றி மக்களின் காவலன் ஆவா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கேரத் தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு துண்டுபிரசுரத்தினை வீதிகளில் போட்டுச் சென்றவர்களின் உந்துருளிகள் சி.சி.ரிவியில் இனம் காணப்பட்டு அவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர். 

அந்தவகையில் நேற்று ( 01) புதுக்குடியிருப்பு வேணாவில்,10ஆம் வட்டாரம்,சிவநகர் பகுதிகளை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன, மேலும் இருவரை தேடிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களிடம் இருந்து பாரிய வாள், மற்றும் கொத்துக்கோடாலி, கத்திகள், கம்பிகள் என்பன மீட்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயன்படுத்தும் உந்துருளிகள் தொலைபேசிகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

தொலைபேசிகளை வைத்து அவர்களின் தொடர்புகளை இனம் கண்டுள்ளதுடன் தொலைபேசிகளில் புதுக்குடியிருப்பு பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் பல குடும்ப பெண்களின் ஆபாச காணொளிகள் இனம் காணப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும், சான்று பொருட்களையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


No comments