பரீட்சை எழுதச் சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த துயரம்.
நேற்றைய தினம் (24) அதிகாலை முதல் பெய்த கடும் மழை காரணமாக புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் மாத்திரம் 5 ஆயிரத்து 791 குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்து 122 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இதுவரை பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்படவில்லை எனவும் , பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தத்தமது வீடுகளிலும், உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இன்று நடைபெற்று வரும் சாதாரண தரப் பரீட்சை நிலையங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 600 மாணவர்கள் பரீட்சை எழுதுவதில் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.
இருப்பினும், அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு எவ்வித தடங்களுமின்றி பரீட்சையில் தோற்றுவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
இதேவேளை, புத்தளம் நகர சபைக்கு உட்பட்ட புத்தளம் - மன்னார் வீதி, கடையார்குளம், நூர் நகர் உள்ளிட்ட தாழ்நிலப் பகுதிகளும், புத்தளம் பிரதேச சபைக்கு உட்பட்ட ரத்மல்யாய, அல்காசிமி சிட்டி மற்றும் பாலாவி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும் வெள்ள நீர் புகுந்தமையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், புத்தளம் - கொழும்பு பிரதான வீதி மற்றும் புத்தளம் - மன்னார் பிரதான வீதி என்பனவற்றை ஊடறுத்து வெள்ள நீர் பாய்ந்து செல்வதையும் அவதானிக்க முடிகின்றது.
இதேவேளை, புத்தளம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட சாஹிரா தேசியப் பாடசாலை, புத்தளம் சென். ஆன்ட்ரூஸ் மத்திய கல்லூரி மற்றும் புத்தளம் இந்து மத்தியக் கல்லூரி என்பனவும் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதை அவதானிக்க முடிந்தது.
இதனால், மேற்குறிப்பிட்ட மூன்று பாடசாலைகளிலும் இன்றைய தினம் கல்வி பொதுத்தராதர சாதாரன தரப் பரீட்சைக்கு தோற்ற வருகை தந்த மாணவ மாணவிகள் பல சிரமங்களுக்கு முகம் கொடுத்தனர்.
திட்டமிட்டபடி காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவிருந்த பரீட்சைகள், தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக 9.45 மணிக்கே ஆரம்பமாகியுள்ளதாக மாணவர்கள் குறிப்பிட்டனர்.
புத்தளம் சாஹிரா தேசியப் பாடசாலையில் கீழ் வகுப்பறையில் பரீட்சைகள் நடத்துவதற்காக சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும், வெள்ளம் காரணமாக வகுப்பறைகளுக்குள் வெள்ளம் புகுந்தமையால் குறித்த பாடசாலையின் மேல்மாடிப் பகுதியில் சாதாரண தரப் பரீட்சை எழுதுவதற்காக ஒழுங்குகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக குறித்த பாடசாலையின் அதிபர் குறிப்பிட்டார்.
புத்தளம் வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள், புத்தளம் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர், பெற்றோர்கள் ஆகியோருடன் முப்படையினரும் கூட்டாக இணைந்து வெள்ளநீரில் இருந்து இயந்திர படகு சேவை மூலம் மாணவர்களை பாதுகாப்பாக கீழ் மாடி வகுப்பறையிலிருந்து மேல்மாடி வகுப்பறைக்கு அழைத்து சென்றனர்.
இதேவேளை, புத்தளம் தொடக்கம் மன்னார் வரையிலான கரையோரப் பகுதிகளில் இன்று கடும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
Post a Comment