Header Ads

test

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை.

 நாட்டில் நிலவும் சீரற்ற மழையுடனான காலநிலை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்திருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் , அத்தனகலு, கிங், களனி, நில்வளா, களு ஆகிய கங்கைகளின் அருகில் வசிப்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அந்த திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

அதேவேளை, நாட்டின் 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது. கொழும்பு, களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி, காலி மற்றும மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் தங்கியிருப்பவர்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் காற்று மற்றும் மழையுடனான வானிலை இன்று முதல் அதிகரிக்ககூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் நிலவுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


No comments