பொருளாதார நெருகடிக்குள் சிக்கியிருக்கும் மக்களை ஜனநாயக ஒடுக்கச் சட்டங்களாலும் நெருக்கடிக்குள்ளாவதை ஏற்றுக்கொள்ள முடியாதது - முன்னாள் எம்பி சந்திகுமார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவியாய்தவிக்கின்ற மக்களைஅவசரகாலச்சட்டம் உள்ளிட்ட ஜனநாயக ஒடுக்கச் சட்டங்களை விதித்து மேலும்நெருக்கடிக்குள்ளாக்குவதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது அது நாட்டை மேலும் மோசமான நிலைக்கே இட்டுச் செல்லும் அது பாரிய எதிர்விளைவுகளையே உண்டாக்கும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
தற்போது நெருக்கடி நிலைமைக்ள தொடர்பில் அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மிகப் பெரிய எதிர்பார்ப்புகளோடும் நம்பிக்கையோடும்தான் இந்த அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்திருந்தனர். இரண்டு ஆண்டுகளுக்குள் அந்த நம்பிக்கையில் ஏற்பட்டிருக்கும் சரிவை மக்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதனாலேயே மக்கள் வீதியில் இறங்கி தமது உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர். இந்த நிலையில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அரசாங்கம் துரித கதியில் தீர்வு காணும் நடவடிக்கையில் இறங்க வேண்டும்.
மாறாக நாளாந்த வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியோடு சட்ட ரீதியான நெருக்கடியையும் ஏற்படுத்தினால் மக்களின் கோபம் எல்லை மீறி விடும். அது நாட்டைப் பலவீனப்படுத்தும் இடத்துக்கே கொண்டு செல்லும். அதனால் வெளிச்சக்திகளே பலனைப் பெறும் நிலை ஏற்படும்.
அரசியல் பொருளாதார நெருக்கடிகளை உரிய முறையில் தீர்க்கவில்லை என்றால் அபிவிருத்தி உட்பட எந்த இலக்கையும் எட்ட முடியாது என்பதை சமத்துவக் கட்சி தொடர்ச்சியாக எடுத்துரைத்து வந்திருக்கிறது.
எனவே சட்டங்களால் மக்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்தி நெருக்கடிக்குள்ளாக்குவதற்குப் பதிலாக அனைத்துத் தரப்பினரின் பங்கேற்போடும் ஒத்துழைப்போடும் நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற தேசிய நெருக்கடிகளுக்குத் தீர்வு காண அரசாங்கம் முன்வர வேண்டும்.
மிக வளமும் அழகும் நிறைந்த இந்தச் சின்னஞ்சிறு தீவு தொடர்ந்தும் எரியும் தேசமாகவும் கண்ணீரைச் சிந்துகின்ற கையேந்துகின்ற நாடாகவும் இருக்கக் கூடாது. இதற்கு இலங்கைச் சமூகங்களுக்களுக்கிடையில் பல்லின சமத்துவத்தின் அடிப்படையில் வெளிப்படையும் நியாயமுமான தீர்வைக் காண்பதே ஒரே வழியாகும். அதற்கான காலம் கனிந்துள்ளது. இந்தக் காலத்தை எந்த வகையிலும் கையிழக்க முடியாது என்று சமத்துவக் கட்சி வலியுறுத்துகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment