தமிழ் மக்கள் ஆட்சி மாற்றத்தை கேட்கவில்லை, அடிப்படை மாற்றத்தை தான் கோருகின்றார்கள் -அமெரிக்கத் தூதுவரிடம் சிவில் சமூக பிரதிநிதிகள் தெரிவிப்பு.
தமிழ் மக்கள் ஆட்சி மாற்றத்தை கேட்கவில்லை, அடிப்படை மாற்றத்தை தான் கோருகின்றார்கள் என அமெரிக்கத்தூதுவர் ஜூலி சுங்கிடம், யாழ்.சிவில் சமூக பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
யாழிற்க்கு இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்ட அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்கிற்கும், யாழ். மாவட்டத்திலுள்ள சிவில் சமூக பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று யாழில் உள்ள தனியார் விடுதியில் நேற்று மாலை இடம்பெற்றது.
இச்சந்திப்பு தொடர்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் கருத்து தெரிவிக்கையில்,
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அனைத்து விதமான பிரச்சினைகளும் அமெரிக்க தூதுவருக்கு எடுத்து சொல்லப்பட்டது. கொழும்பில் பொருளாதார நெருக்கடிகள், அரசியல் நெருக்கடியாக மாற்றமடைந்ததன் விளைவாக அரசியல் ரீதியான பதற்றத் தன்மையொன்று நிலவுகின்றது.
ஆனால் வடக்கு – கிழக்கில் அவ்வாறான பதற்றங்கள் இல்லை. தமிழ் மக்கள் ஏன் பெருமெடுப்பில் சிங்கள மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களில் பங்கெடுப்பது இல்லை என்ற கேள்வியை தூதுவர் கேட்டார்.
தமிழ் மக்கள் ஆட்சி மாற்றத்தை கேட்கவில்லை. அடிப்படை மாற்றத்தை தான் கோருகின்றார்கள்.
மேலும், இலங்கையில் பல்லின பண்பை உறுதிப்படுத்தும் கட்டமைப்பு மாற்றத்தை தான் கேட்கிக்கின்றார்கள் என எம்மால் அமெரிக்க தூதுவருக்கு விளக்கம் அளித்தோம் என தெரிவித்துள்ளார்.
அத்துடன், வடக்கு கிழக்கில் போராட்டங்கள் முன்னெடுக்கும் போது பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் நடந்து கொள்ளும் விதமும், சிங்கள மக்கள் முன்னெடுக்கும் போராட்டத்தில் பொலிஸார் அணுகும் விதம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
தமிழ் சிவில் சமூகங்களின் பிரநிதிகளாக சந்தித்தவர்கள் தமிழ் மக்களின் குறைகள் அனைத்தையும் எடுத்துக் கூறியுள்ளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment