நுகர்வோருக்கு குறைந்த விலையில் வழங்கப்படவுள்ள அரிசி தொடர்பில் வெளிவந்த தகவல்.
இந்தியாவில் இருந்து இன்று நாட்டை வந்தடைந்த 11,000 மெட்ரிக் டன் அரிசியை தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு குறைந்த விலையில் விற்பனைசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய கடன் எல்லை வசதியின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகை அரிசி இன்று நாட்டை வந்தடைந்தது. அதன்படி இலங்கைக்கு வழங்கப்படும், 40,000 மெட்ரிக் டன் அரிசியில் முதல் தொகுதியாக 11,000 மெட்ரிக் டன் அரிசியை தாங்கிய கப்பலொன்று இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்தியாவின் காக்கிநாடா துறைமுகத்திலிருந்து 7,000 மெட்ரிக் டன் நாட்டரிசி, 2,000 மெட்ரிக் டன் சம்பா அரிசி மற்றும் 2,000 மெட்ரிக் டன் பச்சை அரிசி உள்ளிட்ட அரிசித் தொகையெ இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் யோகா பெரேரா உள்ளிட்ட வர்த்தக அமைச்சின் பிரதிநிதிகள் குழுவிடம் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகள் அரிசியை உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.
இந்நிலையில் தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் லங்கா சதொச விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவு நிலையங்கள் ஊடாக ஒரு கிலோ சம்பா அரிசி 130 ரூபாவுக்கு, நாட்டு அரிசி 110 ரூபாவுக்கும், ஒரு கிலோ பச்சை அரிசி 110 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சு கூறியுள்ளது.
மேலும் இந்தக் கடன் எல்லை திட்டத்தின் கீழ் எதிர்வரும் நாட்களில் மற்றுமொருதொகை அரிசி நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதுடன், அரசாங்க விற்பனை நிலையத்தினூடாக நுகர்வோருக்கு குறைந்த விலையில் குறித்த அரிசி விநியோகிக்கப்படும் என்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
Post a Comment