நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த யுவதியின் சடலம் மீட்பு.
வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்றவேளை, நுவரெலியா - கொத்மலை, றம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், யுவதியொருவரின் சடலம் இன்று (13) காலை மீட்கப்பட்டுள்ளது.
ஏனைய ஒரு யுவதியும், இளைஞனும் நீரிழ் மூழ்கி பலியாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவர்களின் சடலங்களை மீட்பதற்கான தேடுதல் வேட்டை தொடர்ந்து 2ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.
வடமாகாணத்தில், வவுனியா மாவட்டத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் இளைஞர், யுவதிகள் 48 பேர் பேரூந்து ஒன்றில், புத்தாண்டை முன்னிட்டு, மலையகத்தில் நுவரெலியாவுக்கு நேற்று (12) சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு சுற்றுலா செல்லும் வழியில், நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட பகுதியான றம்பொடையில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் பேருந்தை நிறுத்திவிட்டு, நீர்வீழ்ச்சியையும், அதனை சூழவுள்ள இயற்கை பகுதிகளையும் பார்வையிடுவதற்கு இளைஞர், யுவதிகள் குழுக்களாக பிரிந்து சென்றுள்ளனர்.
இதில் ஆறு யுவதிகளும், ஒரு இளைஞனுமாக 7 பேர் கொண்ட குழுவினர் றம்பொடை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள ஆற்றுப் பகுதியில் நீராடச்சென்றுள்ளனர்.
திடீரென நீர்வீழ்ச்சி - ஆற்றுப் பகுதியில் நீர்மட்டம் அதிகரித்ததால் அவர்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர்.அவர்கள் கூக்குரல் எழுப்ப, அப்பகுதியில் இருந்து சிலர் வந்துள்ளனர்.அதற்குள் 4 யுவதிகளை அவர்களுடன் சென்ற இளைஞர் காப்பாற்றி கரைசேர்த்துள்ளார். ஏனைய இரு யுவதிகளையும் காப்பாற்ற முற்பட்டவேளையிலேயே மூவரும் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொத்மலை காவல்துறையினர், நுவரெலியா மாவட்ட இராணுவ முகாமின் இராணுவத்தினர், கடற்படை சுழியோடிகள் சம்பவ இடத்துக்கு வந்து, மீட்பு பணிகளை ஆரம்பித்தனர்.
இந்நிலையில் இன்று (13.04.2022) காலை யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா நெடுங்கேனியைச் சேர்ந்த புவனேஸ்வரன் வினோதனி (வயது - 18), வவுனியா, கல்மடு - ஈஸ்வரிபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னுதுரை மதுசாலினி (வயது- 21) ஆகிய இரு யுவதிகளும், வவுனியாவை சேர்ந்த விதுசன் (வயது - 21) ஆகிய மூவருமே காணாமல் போயுள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட யுவதி வவுனியா, கல்மடு - ஈஸ்வரிபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னுதுரை மதுசாலினி (வயது- 21) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவரின் சடலம் கற்பாறையொன்றுக்குள் சிக்கியிருந்த நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேற்படி யுவதியின் சடலம் மீதான மரண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சடலத்தை கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மலைநாட்டில் தற்போது கடும் மழை பெய்துவருகின்றது.
எனவே, நீர்வீழ்ச்சி மற்றும் ஆறுகளின் நீர் மட்டம் திடீரென அதிகரிக்கக்கூடும். எனவே, சுற்றுலா வருபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
றம்பொடை நீர்வீழ்ச்சி பகுதியில் சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணம் அறவிடப்பட்டாலும், அப்பகுதியில் எவ்வித எச்சரிக்கை அறிவித்தல்களும் இல்லை, மக்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவதும் இல்லை என பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
Post a Comment