தந்தையை படுகொலை செய்ய நண்பனுக்கு அடகுவைத்து பணம் கொடுத்த மகன்.
மட்டக்களப்பில் தந்தை ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய மகன் உட்பட இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரலக்குளம் குடாவெட்டி வயல் பிரதேசத்தில் விவசாயப் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட கொட்டகையில் 54 வயதுடைய விவசாயியும் நான்கு பிள்ளைகளின் தந்தையுமான பரசுராமன் ஆறுமுகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவது,
குறித்த சம்பவத்தில் உயிரிழந்த நபருக்கு மூன்று பெண் பிள்ளைகள் உட்பட 22 வயதான சிந்துஜன் என்ற ஆண் மகன் ஒருவர் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 22 வயது மகன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், தந்தையிடம் மது வாங்க பணம் கேட்பது தொடர்பாகவும், தொழுவத்தில் மாடுகளை திருடி விற்பது தொடர்பாகவும் தந்தைக்கும் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சிந்துஜன் தனது தந்தையை கொலை செய்ய திட்டமிட்டு கிரான் பகுதியைச் சேர்ந்த தனது நண்பனான இட்ணராஜா நிரோசன் என்பவரை கடந்த முதலாம் திகதி (1-3-2022) சந்தித்து தனது தந்தையை கொலை செய்ய 50 ஆயிரம் ரூபா பணம் தருவதாக பேரம் பேசியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 12ம் திகதி விவசாய செய்கையை காவல் காப்பதற்காக பரசுராமன் வழக்கம் போல பண்ணைக்கு சென்றுள்ளார்.
இச் சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்தி தந்தையை கொலை செய்வதற்காக இறந்தவரின் மகனான சிந்துஜன், நகை ஒன்றை அடகுவைத்து கொலைதாரிக்கு வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி, ரிப்பன் மற்றும் கல் ஆகியவற்றை மீட்டுள்ளதாகவும், கொலைச் சம்பவம் தொடர்பில் இறந்தவரின் மகன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டதாகவும், விசாரணையின் பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment