மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு.
மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
மட்டக்களப்பு - கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திராய்மடு பகுதியில் நேற்று மாலை மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திராய்மடு ஐந்தாம் குறுக்கு வீதியில் வசிக்கும் கோகிநாதன் நிதுர்ஷன் என்ற 22 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டு கதவு ஒன்றை பொருத்த முற்பட்ட சந்தர்ப்பத்தில்,ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக மின்சாரம் தாக்கி குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு தாக்குதலுக்குள்ளான நபர் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதிலும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
அத்துடன், மட்டக்களப்பு- வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கோமத்லாவெளி பிரதேசத்தில் பயிர்ச்செய்கை செய்துவரும் தனது பண்ணைக்குள் அமைக்கப்பட்டிருந்த மின்சாரவேலியில் சிக்குண்டு பண்ணை உரிமையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று (23) காலை இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோமத்தலாவெளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சந்திரசேகரன் யோகேஸ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
முறையற்ற முறையில் மின்சார கம்பிகள் இணைக்கப்பட்டு பயன்படுத்தியதனால் இவ்வாறு மின்சாரத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
Post a Comment