இராணுவ மயப்படுத்தப்பட்ட நியமனங்களினால்த்தான் நாடு இன்று அழிவைச் சந்தித்துள்ளது - நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்.
எம் இனத்தின் இருப்பு கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் பூநகரி பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பு நேற்று பூநகரியில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் போகமாட்டோம் என்று மார்தட்டியவர்கள் இன்று சர்வதேச நாணய நிதியத்தின் காலடியில் வீழ்ந்து இருக்கிறார்கள்.
இலங்கையில் மக்கள் இன்று எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வரிசையில் நிற்கிறார்கள் எரிவாயுவிற்காக வரிசையில் நிற்கிறார்கள் அத்தியாவசிய பொருட்களை வரிசையில் நின்று தான் வாங்க வேண்டும் என்கிற நிலை இப்போது உருவாகியிருக்கிறது.
பொருளாதார நிலை அதளபாதாளத்திற்கு சென்றுள்ளது. இப்படி இக்கட்டான நேரத்திலும் எம் இனத்தின் வாழ்க்கை என்பது அழிக்கப்பட்டுக்கொண்டே செல்கிறது. எங்களை நோக்கி புத்த கோவில்கள் வருகிறது எங்கள் இடங்களில் கொரோனாக்காலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மற்றும் பயணத்தடைகளின் போது முளைத்த இராணுவ சோதனைச் சாவடிகள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளன.
வனவளத் திணைக்களம் வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் தொல்லியல் திணைக்களம் போன்றன தமிழர்களின் நிலங்களை பறித்து விவசாயம் செய்வதற்கு தடையாக இருக்கிறார்கள்.
முழுமையாக ஒரு இராணுவ மயப்படுத்தப்பட்ட இராணுவ நியமனங்களினால்த்தான் நாடு இன்று இவ்வாறான அழிவைச் சந்தித்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் சிறீரஞ்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜா, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் ,பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுரேன், பூநகரி பிரதேச சபையின் உபதவிசாளர் எமிலியாம்பிள்ளை, தமிழரசுக் கட்சியின் மாவட்ட கிளையின் செயலாளர் விஜயன் ,கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஜோன் தனராஜ் ,பிரதேச அமைப்பாளர் குபேந்திரன் பூநகரி பிரதேச சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
Post a Comment