Header Ads

test

சுதந்திர தினக் கிண்ணத்தை சுவிகரித்த வடக்கு உதைபந்தாட்ட அணி.

 இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்திய மாகாணங்ளுக்கு இடையிலான சுதந்திர கிண்ண உதைபந்தாட்ட போட்டியின் இறுதிப்போட்டி நேற்றையதினம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் வடக்கு மாகாண அணியும்,தெற்கு மாகாண அணியும் பலப்பரீட்சை நடாத்தியிருந்தனர்.

குறித்த போட்டியில் 03.01 என்ற கோல்களின் அடிப்படையில் வடக்கு மாகாண அணி மகுடம் சூடியுள்ளது.

முன்னர் இடம்பெற்ற லீக் சுற்றின் நிறைவில் வடக்கு மாகாண அணி 7 போட்டிகளில் 3 வெற்றிகள் மற்றும் 4 சமநிலையான முடிவுகளுடன் 13 புள்ளிகளைப் பெற்று தரப்படுத்தலில் இரண்டாவது இடத்தைப் பெற்று அறையிறுதிக்கு தெரிவானது.

தொடர்ந்து கிழக்கு மாகாண அணியை அரையிறுதியில் வெற்றி பெற்ற வடக்கு மாகாண அணி சுதந்திர கிண்ண தொடரில் முதல் அணியாக இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது. அதேபோன்று 7 போட்டிகளில் 3 வெற்றிகள், 2 சமநிலையான முடிவுகள் மற்றும் 2 தோல்விகளுடன் 11 புள்ளிகளைப் பெற்ற தென் மாகாண அணி நான்காவது அணியாக அரையிறுதிக்கு தெரிவாகியது.

தொடர்ந்து சபரகமுவ அணியை அரையிறுதியில் வெற்றி பெற்ற தென் மாகாண அணி சுதந்திர கிண்ண தொடரில் இரண்டாவது அணியாக இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.

குறித்த இரு அணிகளையும் ஒப்பிடும் போது இதற்கு முன்பு இடம்பெற்ற போட்டிகளில் தோல்வி அடையாமல் இருக்கும் அணியான வடக்கு மாகாண அணியின் பெபேறுகள் தென் மாகாண அணியை விட சிறப்பாக அமைந்திருந்தது. பிரமாண்டமாக இடம்பெற்ற நேற்றைய இறுதிப் போட்டியில் மரியதாஸ் நிதர்சன் தலைமையில் வடக்கு மாகாண அணியும், எம்.ஆர்.ரிஷாத் தலைமையில் தென் மாகாண அணியும் களம் இறங்கியது.

போட்டியின் முதலாது பாதி ஆட்டத்தில் 02:00 என்ற கோல்களின் அடிப்படையில் வடக்கு மாகாண அணி முன்னிலை வகித்தது. தொடர்ந்து இடம்பெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் ஒவ்வொரு கோள்களை உட்புகுத்தியதன் மூலம் போட்டியின் முடிவில் 03: 01 என்ற கோல்களின் அடிப்படையில் வடக்கு மாகாண அணி வெற்றிபெற்று முதலாவது சுதந்திரக் கிண்ண உதைபந்தாட்ட தொடரின் சம்பியனாகியுள்ளது.

வடக்கு மாகாண அணி சார்பில் வி.விக்னேஸ், கே.தேனுஜன் மற்றும் எம்.நிதர்சன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களை பெற்றுக்கொடுத்த அதே வேளை தென் மாகாண அணி சார்பில் டி.டுமுண்டு ஒரு கோலை பெற்றுக்கொடுத்தார்.

தொடரில் அதிக கோல்களை உட்புகுத்திய வீரனுக்குரிய தங்க காலணி விருது மற்றும் தொடரின் தொடர் நாயகனுக்கான தங்க பந்து விருதுகளை வடக்கு மாகாண அணித்தலைவர் மரியதாஸ் நிதர்சன் வசமானது.

அத்தோடு தங்க கையுறை விருது கிழக்கு மாகாண அணி வீரர் எம்.எம்.முர்ஷித்துக்கும், வளர்ந்து வரும் வீரருக்கான விருது கிழக்கு மாகாண அணி வீரர் முகமெட் முன்சிப்புக்கு வழங்கப்பட்டது.

நேற்றைய இறுதிப் போட்டியில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச கலந்துகொண்டு வெற்றிக் கிண்ணத்தினை வழங்கி வைத்திருந்தார்.

குறித்த போட்டி நிகழ்வில் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் மற்றும் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.











No comments