யாழில் சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட இளைஞன்.
யாழில் இளைஞர் ஒருவர் இனந்தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக உமமறவினர்களினால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் யாழ் மாவட்டம் புத்தூர் மேற்கு – நவக்கிரியில் நேற்றைய தினம் (26) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அதே பகுதியைச் சேர்ந்த அருந்தவராசா சயந்தன் (வயது – 30) என்ற இளைஞரே இவ்வாறு இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வீட்டு வளாகத்தில் இருந்து யாரோ பாய்ந்து வெளியே செல்வதை அவதானித்த இளைஞர் வீட்டுக்கு வெளியே சென்று பார்த்தார் என்றும், வெளியே சென்ற இளைஞரை வீட்டின் முன்புறம் உள்ள தோட்ட வெளியில் நின்றிருந்த மூவர் துரத்திச் சென்றனர்.
அதன்பின்னர் இளைஞர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடியபோது அவரது கைபேசி வீட்டிலிருந்து சுமார் 400 மீற்றர் தூரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், கடந்த 12ஆம் திகதி இளைஞரின் வீட்டுக்கு வந்த இனந்தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியிருந்தனர். அதில் வெட்டுக்காயத்துக்கு உள்ளான இளைஞரின் தந்தை தற்போதும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இருவர் நேற்று பிணையில் வெளியே வந்துள்ளதாக இளைஞரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் சிலரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும், விசாரணைகளின் பின்னரே மேலதிக தகவல்களைத் தெரிவிக்க முடியும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment