அரசாங்கத்திற்கு ஒரு இலட்சம் இல்லை பத்து மடங்கு பணத்தை நாங்கள் தருகின்றோம் - காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சீற்றம்.
அரசாங்கத்திற்கு ஒரு இலட்சம் இல்லை பத்து மடங்கு பணத்தை நாங்கள் தருகின்றோம். நாம் கையளித்த எமது உறவுகளை மீட்டுத் தாருங்கள் என முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கம் காட்டமாக தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி ம.ஈஸ்வரி மற்றும் செயலாளர் பி.றஞ்சனா ஆகியோர், இன்று ஊடக சந்திப்பை நடத்தினர். இதன்போது அவர்கள் கருத்துரைக்கையில்,
காணாமல் போனோரின் குடும்பங்களின் மீள் வாழ்வுக்காக ஒருமுறை மாத்திரம் செலுத்தப்படும் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
எங்கள் உயிரின் பெறுமதி ஒரு இலட்சம் என்று தீர்மானிப்பதற்கு இவர்கள் யார்? இவ்வாறு எங்களின் உறவுகளின் பெறுமதியை புரிந்து வைத்திருப்பவர்களுக்கு, இதனைவிட பத்து மடங்காக அல்லது இருபது மடங்கு பணத்தை நாம் தருகின்றோம்.
நாங்கள் அவர்களிடம் கையளித்த உறவுகளை அவர்கள் தேடிக்கண்டறிந்து எங்களிடம் கையளிக்கட்டும். அரசாங்கத்தின் காணாமல் போனோர் அலுவலகம் ஊடாக வழங்கப்படும் நட்டஈடு பணத்தையோ, மரணச் சான்றிதழையோ, காணவில்லை என்ற சான்றிதழையோ நாங்கள் பெற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. எமது உறவுகளுக்கு சரியான நீதி கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
Post a Comment