கணவனின் கள்ளக் காதலை அறிந்த மனைவிக்கு கணவன் கொடுத்த பரிசு - வவுனியாவில் சம்பவம் - மனைவி வைத்தியசாலையில் அனுமதி.
வவுனியாவில் ஆத்திரமடைந்த கணவரொருவர் மனைவியைத் தாக்கியதில் காயமடைந்த மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா ஏ9 வீதியில் தேநீர்க்கடை நடத்தி வரும் கணவன் வேறு ஒரு பெண்ணுடன் நெருங்கிப்பழகி வருவதாக மனைவிக்குக் கிடைத்த தகவலால் கடந்த இரண்டு வருடங்களாக குடும்பத்திற்குள் முரண்பாடுகள் நிலவி வந்துள்ளது.
கணவன் குறித்த பெண்ணுடன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தபோது இருவரையும் கையும் மெய்யுமாகப் பிடித்த மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டையும் மேற்கொண்டுள்ளார்.
இதனால் கணவன் வீட்டிலிருந்து வெளியேறி தேநீர்க்கடையில் தஞ்சமடைந்துள்ளதுடன், வீட்டிற்குச் செல்வது இல்லை என தெரியவருகிறது.
இந்த நிலையில் மனைவி, மூன்று பிள்ளைகளுடன் வசதியற்ற நிலையில் பொருளாதார ரீதியில் நலிவடைந்து கணவனின் உதவியின்றி வசித்து வந்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை சம்பவதினத்தன்று கணவன் குறித்த பெண்ணை இரகசிய இடத்தில் சந்தித்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது அங்கு திடீரென்று வந்த மனைவி இங்கு எதற்காகச் சென்றீர்கள் எனக் கேட்டு தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதை சற்றும் எதிர்பாராத கணவன் ஆத்திரமடைந்து வீட்டிற்குச் சென்று மனைவியுடன் முரண்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.
எனினும் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாத கணவன் கையில் வைத்திருந்த தலைக்கவசத்தினால் மனைவியைத் தாக்கியதுடன் அங்கிருந்த விறகுக்கட்டை ஒன்றினால் தாக்கி மேலும் காயப்படுத்தியுள்ளார்.
இதனால் தலையில் பலத்த காயமடைந்த மனைவி அயலவர்களினால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
12 தையல் தலையில் போடப்பட்டு இரண்டு நாட்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றபோதும் பொலிஸார் இத்தாக்குதலை மேற்கொண்ட கணவனைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவில்லை எனவும், பொலிஸார் கணவனுக்குச் சார்பாக நடந்துகொள்வதாகவும், கணவனைக் கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறும் பாதிக்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.
Post a Comment